எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

ஆர்ப்பரிக்கும் அதிமுக... அடக்கி வாசிக்கும் பாஜக!
மோடியுடன் எடப்பாடி பழனிசாமி...
மோடியுடன் எடப்பாடி பழனிசாமி...

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருவழியாக அதிகாரபூர்வமாக அறிவித்தேவிட்டது அதிமுக. தலைமையின் இந்த முடிவை அதன் தொண்டர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால்... “இவர்களை கட்டிச் சுமப்பதால் நமக்குத்தான் நஷ்டம்” என இத்தனை காலமும் புழுங்கிக்கொண்டு இருந்தவர்கள் அவர்கள்.

ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் எண்ணவோட்டம் ‘பாஜக நமக்கு வேண்டவே வேண்டாம்’ என்பதாக இருந்தாலும் கட்சித் தலைமையால் அப்படி ஒரேயடியாக பாஜகவை உதறித்தள்ள முடியவில்லை. அதற்குக் காரணம், அதிமுக முக்கிய தலைவர்கள் தலைக்கு மேலே கத்தியாய் தொங்கும் வம்பு, வழக்குகள்.

பாஜகவை பகைத்துக்கொண்டால்...

பாஜகவை பகைத்துக்கொண்டால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகளை வைத்து அது தனது அரசியல் வேலையைக் காட்டும். அது இங்கிருக்கும் திமுக அரசுக்கும் தொக்காகிப் போகும். பாஜகவுடன் பகையானால் திமுகவும் தங்கள் மீது கூடுதல் தெம்புடன் வழக்குகளை எடுத்து வாள் வீசும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய தலைவர்கள் யோசித்தனர். அதனால் தான் என்னதான் அண்ணாமலை அடித்தாலும் பிடித்தாலும் அத்தனையையும் சகித்துக் கொண்டார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள், புகார்கள் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் இருந்தபோது அதை சாதுர்யமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் பழனிசாமி தரப்புக்கு இருந்தது. அப்போதே பாஜகவை பகைத்துக் கொண்டிருந்தால் ஒருவேளை ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பழனிசாமியின் இருக்கைக்கேகூட இன்னல் வந்திருக்கலாம். இதையும் அவதானித்தே, அண்ணாமலை தவணை முறையில் தந்த அடிகளை எல்லாம் தாங்கிக் கொண்டார் பழனிசாமி.

அண்ணாவையே வம்புக்கு இழுத்த அண்ணாமலை!

வீரியத்தைவிட காரியம் பெரிது என்பதை கச்சிதமாக புரிந்துகொண்டு அமைதிகாத்த பழனிசாமி, ஒருவழியாக அதிமுகவை தன்வசமாக்கினார். இந்த இலக்கை அடைவதற்கு பாஜகவின் தயவு நிச்சயம் தேவை என்பதை தொண்டர்களும் புரிந்துகொண்டதால் பாஜக மீதான தங்களின் புழுக்கத்தை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டார்கள்.

நடைபயணத்தில் அண்ணாமலை...
நடைபயணத்தில் அண்ணாமலை...

ஆனால், அதிமுகவின் பொறுமையை சாதாரணமாக எடைபோட்ட அண்ணாமலை, தொடர்ந்து அவர்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தார். அப்போதும் அமைதிகாத்த பழனிசாமி, அண்ணாமலைக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட இரண்டாம்கட்ட தலைவர்களை வைத்து பதிலடி கொடுத்தார்.

அப்போதும் அடங்கிப்போகாத அண்ணாமலை, அண்ணாவையே வம்புக்கு இழுத்தார். கூடவே, “எங்களது கட்சியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அப்படியிருக்கையில், நான் எப்படி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று சொல்லமுடியும்?” என்று எதிர்வாதம் செய்தார். இதற்கெல்லாம் பாஜக மேல்மட்ட தலைவர்கள் என்னதான் பதில் சொல்கிறார்கள் என்று கேட்பதற்காக அதிமுக தலைவர்களை கடைசி கடைசியாய் டெல்லிக்கே அனுப்பிவைத்தார் பழனிசாமி. ஆனால், டெல்லியிலிருந்து அவர்கள் கொண்டுவந்த பதில்களும் ரசிக்கும்படியாக இல்லை.

கறார் காட்டிய டெல்லி தலைமை!

அண்ணாமலையை தலைவர் பதவியைவிட்டு நீக்கினால் தான் தமிழகத்தில் இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் இணக்கமாக தேர்தல் பணிகளைச் செய்வார்கள் என்ற அதிமுகவின் பிரதான கோரிக்கையை இடதுகையால் ஒதுக்கித் தள்ளிவிட்டது பாஜக தலைமை. அடுத்ததாக, தொகுதிப் பங்கீடு விஷயத்தில், “இரட்டை இலக்கத்தில் எங்களுக்கு தொகுதிகள் வேண்டும்... அதுவும் இன்னின்ன தொகுதிகளை எல்லாம் கட்டாயம் நீங்கள் எங்களுக்கு விட்டுத்தந்தே ஆகவேண்டும்” என்று கறாராகச் சொல்லி இருக்கிறது டெல்லி தலைமை. இதுதான் அதிமுக தலைவர்களை ரொம்பவே உஷ்ணமாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே அண்ணாமலையின் பேச்சுக்களால் காயம்பட்டு நின்ற அதிமுக, டெல்லி தலைமை ஒரு நியாயத்தைச் சொல்லும் என்று நம்பியது. அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதால், அடுத்தகட்ட முடிவுக்கு தயாராகவேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் பழனிசாமிக்கு ஏற்பட்டது. “ஒரு சிலரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த கட்சியையும் பாஜகவிடம் அடமானம் வைக்கவேண்டுமா?” என்ற கேள்வி கட்சிக்குள் முன்னைவிட கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்தது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...

ஒருகட்டத்தில் பழனிசாமிக்குள்ளும் இதே கேள்வி எழுந்தது. அதற்கு பதில் தேடவே அவசர ஏற்பாடாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதற்கு முன்னதாக தனக்கு நெருக்கமான அதிமுக தலைவர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தினாராம் பழனிசாமி.

எதுவந்தாலும் பார்த்துக்கலாம்!

அந்த ஆலோசனையின் போது, “கூட்டணியை உதறினால் ரெய்டுவிட்டு மிரட்டுவார்கள் அவ்வளவுதானே... எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் விடுங்கள். இவர்களைக் கூட்டணியில் வைத்திருந்ததால் தான் 2019 மக்களவைத் தேர்தலில் நமக்கு படுதோல்வி. கடந்த முறை நாம் ஆட்சியை நூலிழையில இழந்தோம். இல்லாவிட்டால்... மூன்றாவது முறையாகவும் நாம் ஆட்சியைப் பிடித்திருப்போம்.

பாஜக கூட்டணிக்குள் நாம் சிக்கிக்கொண்டதால், அதிமுகவுக்கு வாக்களித்து வந்த சிறுபான்மையினர் மக்கள் நம்மையும் எதிரிகளாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் நமது தயவில் காலூன்றி இருக்கும் பாஜக அந்த நன்றி விசுவாசம்கூட இல்லாமல் தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறது. இனியும் இதை அனுமதிக்க வேண்டாம். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல... இனி எந்தத் தேர்தலிலும் பாஜகவுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்” என்று அழுத்தமாகவே சொன்னாராம் பழனிசாமி.

ஆலோசனையில் பங்கெடுத்த மூத்த முன்னோடிகள் அனைவரும் இந்த முடிவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்களாம். தனது இந்த முடிவை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமாக வாசித்து பாஜகவுக்கு பகீர் கொடுத்தார் பழனிசாமி.

அடுத்து என்ன நடக்கும்?

பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டதால் தமிழகத்தில் புதிதாக தேர்தல் கூட்டணி ஒன்றை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக. அதிமுக இருக்கும் தைரியத்தில் தான் புதிய தமிழகம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணிக்கு கொடிபிடித்தன. இப்போது நிலைமை மாறி இருப்பதால் அந்தக் கட்சிகளும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யக்கூடும். அதற்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது புரட்சிபாரதம் கட்சி. பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் அந்தக் கட்சி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. மற்ற கட்சிகளும் இப்படி மாற்றி யோசித்தால் தமிழகத்தில் பாஜக தனித்துவிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதேசமயம், ஏற்கெனவே கைவிட்டுப் போயிருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கவும் திட்டங்களை தயாராக வைத்திருக்கிறது அதிமுக. பாஜகவுடன் உரசல் தொடங்கியபோதே ‘எதற்கும் இருக்கட்டும்’ என்று சிறுபான்மையினரை தாஜா செய்யும் முயற்சியில் அதிமுக இறங்கிவிட்டது. அதன் தொடக்கம் தான், பாஜகவை கடுமையாக விமர்சித்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜாவை கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் கட்சிக்குள் இழுத்துக்கொண்டார் ஈபிஎஸ். இப்போது ராமநாதபுரம் தொகுதியில் அவரை களமிறக்கவும் அதிமுக முடிவுசெய்துள்ளது. இன்னும் சில தொகுதிகளில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பளித்து அவர்களின் சினத்தை தணிக்கவும் திட்டம் வைத்திருக்கும் ஈபிஎஸ், அதற்கு முன்னதாக பாஜக கூட்டணியில் தாங்கள் எதிர்க்கொண்ட சங்கடங்களை சிறுபான்மையினர் மத்தியில் எடுத்துச் சொல்லி பரிகாரம் தேடவும் அதிமுக தலைவர்களுக்கு அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திமுகவுக்கும் சிக்கல் தான்!

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததால் இப்போது திமுகவுக்கும் மறைமுகமாக நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதுநாள் வரை அதிமுக அணியில் பாஜக இருந்ததால் திமுக அணியில் இருக்கும் கட்சிகள் தங்களுக்கு போவதற்கு மாற்று இடம் இல்லாமல் மறுகின. இதைப் பயன்படுத்தி திமுகவும் தொகுதிப் பங்கீடு, யார் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட விஷயங்களில் பெரியண்ணன் பாலிஸியைக் கையாண்டது. “இம்முறை காங்கிரஸுக்கு திமுக கூட்டணியில் 5 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்கிற ரீதியில் இப்போதே சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். ஆனால், இனிமேல் திமுகவும் கொஞ்சம் இறங்கிவந்தாக வேண்டும். பழையபடி கறார்காட்டினால், கூட்டணியில் இருப்பவர்கள் பெட்டியைக்கட்டக்கூடும். அவர்களை வாஞ்சையுடன் அழைத்துக்கொள்ள அதிமுக இப்போது வாழைமரம் கட்டிக் காத்திருக்கிறது. பாஜக அங்கே இல்லாததால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எவ்வித கூச்சமும் இல்லாமல் எம்ஜிஆர் மாளிகையின் கதவுகளைத் தட்டலாம். இந்த இடத்தில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த விசிக திருமாவளவனை எடப்பாடியார் போனில் அழைத்தும் நலம் விசாரித்ததையும் பொரு(த்)திப் பார்க்க வேண்டும்.

பாஜகவின் உறவை முறித்துக்கொண்டதால் அதிமுக தொண்டர்கள் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள். “எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு” எனத் துள்ளுகிறார்கள். ‘நன்றி... மீண்டும் வராதீர்கள்’ என அதிமுக ஐடி விங் ஆனந்தமாய் ட்விட் போடுகிறது. இந்த உற்சாகம் அதிமுக கட்டவிருக்கும் புதிய கூட்டணிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். பாஜக தரப்பிலும் தொண்டர்களுக்கு உற்சாகம் தான். ஆனால், தேர்தலில் போட்டியிடும் கனவில் இருந்த பாஜக தலைவர்கள்தான் சோர்ந்துபோய்க் கிடக்கிறார்கள். அதிமுகவின் தயவு எத்தனை முக்கியமானது என்பது அவர்களுக்குத்தானே தெரியும்.

“அண்ணாமலை அதீத நம்பிக்கையில் அதிமுகவை வெளியேபோக வைத்துவிட்டார். இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கடைசி நேரத்தில் ஆளுக்கொரு திசையில் போய்விடும் என நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது கூட்டணியில் இருந்த இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக நம்மைவிட்டுப் பிரிந்துசெல்ல நாமே காரணமாகி விட்டோம்” என்று அதிமுக ஆதரவு தமிழக பாஜக தலைவர்கள் வருத்தப்பட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், இயல்பாகவே அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் ரெய்டுக்கு வந்தால்கூட அதையும், “பார்த்தீர்களா மக்களே பாஜகவின் சுயரூபத்தை” என்று அதிமுக அரசியலாக்கும். அதேசமயம், “அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களையும் அம்பலப்படுத்துவேன்” என்று ஏற்கெனவே அலாரம் அடித்திருக்கும் அண்ணாமலை இனி இன்னும் சுதந்திரமாகச் சுழற்றுவார். அதற்கு முன்னோட்டமாக, ‘புலிகள் போல் தலைவர்கள் இருக்க புலிகேசியின் ஆதரவு எதற்கு?’ என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி அதிமுக விலகலைக் கொண்டாடுகிறார்கள். அதிமுக தயவு தங்களுக்குத் தேவையில்லை என தெளிவாக முடிவாகிவிட்டால், சென்னையில் அண்ணாமலை தனது யாத்திரையை முடிப்பதற்குள் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வாசித்து அலறவிடலாம். அது நடந்தால் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும்!

பெட்டிச் செய்தி:

சகித்துக்கொண்டு இருந்தோம்! - வைகைச்செல்வன்

பாஜக கூட்டணியைவிட்டு விலகியது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன், “எங்கள் கொடியில் அண்ணா, கொள்கையில் அண்ணா, கட்சியின் பெயரில் அண்ணா... அப்படி இருக்கையில் அண்ணாவை கொச்சைப்படுத்திப் பேசுகிறார் அண்ணாமலை. அதுமாத்திரமல்ல... எம்ஜிஆர், அம்மா, எடப்பாடியார் உள்ளிட்ட எங்கள் தலைவர்களையும் எங்களின் முன்னாள் அமைச்சர்களையும் தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார். இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல்தான் கூட்டணியைவிட்டு வெளியேறி இருக்கிறோம்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

மத்தியில் மோடி மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி என்று சொன்னால் தான் தமிழகத்தில் வெல்ல முடியும். இது புரியாத அண்ணாமலை, ‘எடப்பாடியை முதல்வராக்கவா நான் இருக்கிறேன்?’ என்கிறார். அடிமைக் கட்சி, சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்ற விமர்சனங்களை எல்லாம் சகித்துக்கொண்டு நாங்கள் இத்தனை நாளும் பாஜக கூட்டணியில் இருந்தோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை.

இப்போது எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள்கூட அதிமுகவை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போகப் போகப் பாருங்கள் எங்கள் அரசியலை!” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in