'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்

நடிப்பின் பல்கலைக்கழகம் என ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படுவர் சிவாஜி கணேசன். அவரின் 95வது பிறந்தநாள் இன்று. வற்றாத கடல் போன்றது அவரது சினிமா வாழ்வு. நித்தம் ஒரு புது அனுபவமும் கற்றலுமாக பெருவாழ்வு வாழ்ந்தவரின் வாழ்வில் இருந்து சில சுவாரஸ்ய துளிகள் இதோ...

* நடிகர் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படம் ‘பராசக்தி’ என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தப் படத்தில் இவரை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்த போது, வேண்டாம் எனப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், யாருடைய எதிர்ப்பையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் இவரை இதில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இது காலத்திற்கும் நிலைத்து நின்றது. இதன் பிறகு ஒவ்வொரு பொங்கல் அன்றும் தயாரிப்பாளர் பெருமாள் வீட்டுக்குச் சென்று ஆசி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் சிவாஜி.

நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்

* படம் வெளியாகும் போது சினிமா நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய கட்-அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரம் இப்போது வரை தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், தமிழில் அப்படி முதல் கட்டவுட் வைத்தது நடிகர் சிவாஜி கணேசனுக்குதான். அவருடைய ‘வணங்காமுடி’ படத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய கட்-அவுட் வைத்து கொண்டாடினர்.

நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்

*வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்திருந்தாலும், தனக்கு ‘சிவாஜி’ எனப் பெயர் சூட்டிய தந்தை பெரியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசைபட்டார் சிவாஜி. ஆனால், அது இறுதி வரை நடக்கவே இல்லை.

*நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்து ஜொலித்த இவரையும் அரசியல் ஆசை விட்டு வைக்கவில்லை. அரசியலில் திமுக, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் பின்பு தனியாக ’தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால் அதில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்

*எம்.ஜி.ஆர் நடிக்கும் கதை, கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களை அவரது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணிதான் பார்த்துக் கொண்டார். அது போலவே நடிகர் சிவாஜிக்கு அவரது தம்பி சண்முகம் தான் பக்க பலமாக இருந்தார். கால்ஷீட், கதை விஷயங்களை எல்லாம் தன் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு நடிக்கும் கதாபாத்திரங்களில் முழுமையாக கவனம் செலுத்தினார் சிவாஜி.

*படத்திற்குப் படம் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் சிவாஜி. பெண் வேடத்தில் இருந்து கடவுள் வேடம் வரை சவாலான கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தார். ’பராசக்தி’ படத்தில் ஆரம்பித்த அவரது பயணம் ‘படையப்பா’, ‘பூப்பறிக்க வருகிறோம்’ ஆகிய படங்களில் நிறைவடைந்தது.

இன்றைக்கும் தமிழ் சினிமாவில், புகழ் வெளிச்சம் சேர்க்கிற நடிகர்கள் அனைவருமே, தங்களது பேச்சில் மறக்காமல், ‘சிவாஜி சாரின் வசன உச்சரிப்பு தான்’ தங்களது சினிமா மீதான காதலுக்கு அஸ்திவரம் என்கிறார்கள். அப்படி மூன்று தலைமுறை இளைஞர்களைக் தன் நடிப்பாலும், உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் கட்டிப்போட்ட சிவாஜி கணேசன் ரசிகர்களின் நினைவுகளில் தலைமுறைகளைத் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in