சீனியர் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா... காங்கிரஸுக்கு கடும் ஷாக்!

ராகுல் காந்தி கார்கே
ராகுல் காந்தி கார்கே

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீட் மறுக்கப்பட்ட சீனியர்கள் சிலர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இம்மாநில தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சியும் களம் காண்கின்றன. மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறுகின்றன. ஆளும் பாஜக பெரும் தோல்வியை எதிர்கொள்ளக் கூடும் என்கின்றன சர்வேக்கள்.

ராகுல் காந்தி கமல்நாத்
ராகுல் காந்தி கமல்நாத்

இத்தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. 144 வேட்பாளர்களைக் கொண்ட இந்த முதல் பட்டியலில், காங்கிரஸின் 96 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 69 பேர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018, 2020 இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 36 பேர் மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்கபட்டுள்ளனர். 19 பேர் பெண்கள் மற்றும் 30 ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் ஓபிசி மகா பஞ்சாயத் தலைவர் சாகப் சிங் குஜ்ஜாரும் ஒருவர். குவாலியர் ரூரல் தொகுதியில் சாகப் சிங் குஜ்ஜார் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச மாநில மொத்த மக்கள் தொகையில் 40% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்.

முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மகன், ஜெய்வர்தன் சிங்; முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியா மகன் விக்ராந்த் பூரியோ, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வாரிசுகளில் முக்கியமானவர்கள். திக்விஜய்சிங் தம்பி லஷ்மணனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய அவதேஷ் நாயக், பைஜ்நாத் யாதவ் ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ராகுல் காந்தி கார்கே
ராகுல் காந்தி கார்கே

இந்த சூழலில்தான், காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர்கள் பட்டியல் கட்சிக்குள் பிரளயத்தை உருவாக்கி இருக்கிறது. மூத்த தலைவர் யத்வேந்திரா சிங், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் சிங் யாதவ், கஜேந்திர சிங், ஷர்தா காதிக் மற்றும் விவேக் யாதவ் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாததால் காங்கிரஸில் இருந்து விலகுவதாக கூண்டோடு அறிவித்துள்ளனர். ஓபிசி வேட்பாளர்களை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டதாக இவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பியூஷ் பாபேலே, மூத்த தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து நவராத்திரி நாளில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 144 வேட்பாளர்களுமே உரிய சர்வே அடிப்படையிலும் மேலிடம் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஒப்புதலுடனுமே அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in