ராகுல் காந்தி சென்ற காரின் கண்ணாடிகள் திடீரென நொறுங்கியது... மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

உடைந்த கார் கண்ணாடியை பார்வையிடும் ராகுல் காந்தி
உடைந்த கார் கண்ணாடியை பார்வையிடும் ராகுல் காந்தி
Updated on
2 min read

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பயணத்தின் போது, அவர் சென்ற காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை பேரணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்காக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி தற்போது யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகியவற்றில் தொடங்கிய பேரணி, அசாம், அருணாச்சல பிரதேசம் வழியாக மேற்கு வங்கத்தை அடைந்து அங்கிருந்து பீகார் சென்று மீண்டும் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் தற்போது ராகுல் காந்தி, யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாளுக்குநாள் ராகுலின் பயணத்திற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், கூட்டமும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பேரணியில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி பயணித்த காரின் பின்புறம் கூட்டத்தில் இருந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ராகுல் காந்தி சென்ற காரின் பின்புற கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சிதறியது.

ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது
ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட யாருக்கும் எந்த காயமும் பாதிப்பும் ஏற்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், ராகுல் காந்தி காரில் இருந்து வெளியே வந்து உடைந்த கண்ணாடிகளை பார்வையிடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. கூட்டம் அதிகம் இருந்ததால் காங்கிரஸ் தொண்டர்களே ஆர்வக்கோளாறில் இதை செய்தார்களா? அல்லது கூட்டத்தினை கலைப்பதற்காக மர்ம நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கார் உடைந்த சம்பவம் குறித்து ராகுலின் பாதுகாப்பு படையினர் விசாரணை
கார் உடைந்த சம்பவம் குறித்து ராகுலின் பாதுகாப்பு படையினர் விசாரணை

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இது சதிச்செயலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத்தே, இது தாக்குதல் சம்பவம் அல்ல எனவும், கூட்டத்தில் ராகுலை பார்க்க முதாட்டி ஒருவர் முண்டியடித்து வந்த போது, கார் திடீரென நின்றதால் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு இடித்து கண்ணாடி உடைந்ததாக விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in