என்.ஐ.ஏ அதிகாரிகள் மரியாதையுடன் விசாரித்தார்கள்... 10 மணிநேர விசாரணைக்குப் பின் சாட்டை துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், முருகன் ஆகியோரிடம் 10 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாட்சிகளாக மட்டுமே தங்களிடம் என் ஐ.ஏ விசாரணை நடைபெற்றதாகவும், சம்மன் அளித்தால் மட்டும் சீமான் ஆஜரானால் போதும் என அதிகாரிகள் கூறியதாகவும் சாட்டை முருகன் தெரிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் துப்பாக்கி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த 2ம் தேதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சட்டை துரைமுருகன், இசை மதிவாணன், முருகன் உட்பட நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விடுதலை புலிகளுக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் விடுதலை புலிகளுக்கு தொடர்புடைய புத்தகங்களை பறிமுதல் செய்தாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ஐஏ அலுவலகத்தில் துரைமுருகன், மதிவாணன்
என்ஐஏ அலுவலகத்தில் துரைமுருகன், மதிவாணன்

இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அனுப்பிய சம்மன் அடிப்படையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இசைமதிவாணன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரும் புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்தனர். சுமார் 10 மணி நேரங்களாக இவர்களிடம் என்.ஐ.ஏ எஸ் பி ஸ்ரீஜித் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், “சேலம் ஓமலூரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர், இந்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் எங்களுக்கு தொடர்பு உள்ளதா என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் என் ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குற்றவாளிக்கு அளிக்கும் சம்மன் இல்லை, சாட்சி சம்மன் என்றும் என்.ஐ.ஏ கேட்ட கேள்விகளுக்கு அனைத்துக்குமே பதில் அளித்துள்ளோம்.

எங்களை தீவிரவாதிகள் போல சில அரசியல்வாதிகள் சித்தரிக்க முயல்கிறார்கள். இவ்வழக்கில் எங்களை சாட்சியாக வைத்து மரியாதையுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். யூடியூப் வீடியோக்கள் குறித்தும் தங்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன்

எங்களிடம் எந்தவிதமான ஆவணங்களையும் என்.ஐ.ஏ கேட்கவில்லை, அதனால் நாங்களும் கொண்டு செல்லவில்லை, விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வர தயாராக உள்ளோம். அவர்களும் விசாரணைக்கு தேவைப்பட்டால் அழைப்பதாக கூறினார்கள். இந்த கட்சியை சிதைப்பதற்கு யார் நினைத்தாலும் அதை எதிர்க்கும் தம்பிகளில் நானும் ஒருவனாக இருப்பேன், இந்த கட்சி ஒரு குடும்பம் போன்றது, நாம் தமிழர் கட்சியை நான் கைப்பற்ற நினைப்பதாக கூறுவது தவறு” என்று கூறினார்

மேலும், “இடும்பாவனம் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு நாளை ஆஜராக என்.ஐ.ஏ சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கார்த்திக் சில காரணங்களினால் நாளை ஆஜராகமாட்டார். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஆஜராகினால் மட்டும் போதும் என என்.ஐ.ஏ அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

புத்தக கண்காட்சியில் வாங்கிய தடை செய்யப்படாத விடுதலை புலிகளுக்கு தொடர்புடைய இரண்டு புத்தகங்களை மட்டுமே என்.ஐ ஏ எனது வீட்டில் இருந்து கைப்பற்றியது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடைய பல புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. ஆனால் இந்த புத்தகத்திற்கும் வழக்கிற்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. வேறொரு வழக்கிற்காக சேலத்துக்கு சீமான் சென்றுள்ளதால் இங்கு வர இயலவில்லை. என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் கொடுக்காமல் சீமான் ஆஜராக தேவையில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in