வட மாநிலங்களில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதால் வெப்பம் அதிகரித்து இருப்பது அண்ணாமலைக்கு தெரியாதா என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழாக்கள் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று தலைமை தேர்தல் பணிமனையை திறந்து வைத்தனர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு நகைச்சுவைகளை தொலைக்காட்சிகள் வழியாக மக்கள் பார்த்து வருகின்றனர். ஒருவர் சினிமாவில் மனைவியை கலெக்டர் ஆக்கியது போல், நிஜத்தில் மனைவியை எம்.பி., ஆக்குவேன் என்கிறார். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இரண்டு டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சமூக ஆர்வலரான பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பதில் அளித்து விட்டார். ஒரு அரசியல் கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை அதிகரிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். உலகம் முழுவதுமே வெப்பம் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கிறது” என்றார்.
மேலும், ”மத்திய இந்தியாவில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகளை அழித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் வெப்பம் அதிகரிக்கும் என்பது அண்ணாமலைக்கு தெரியாதா? ஆனால் திமுக சார்பில் தமிழ்நாட்டில் 23.7 சதவீதமாக உள்ள வனப்பரப்பை, 25 சதவீதமாக உயர்த்துவதற்கான வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக சுமார் 2.8 கோடி நாட்டின மரங்களை நடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. திமுக போல் வேறு எந்த கட்சியேனும் சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை கொடுத்து வாக்குறுதி அளித்து இருக்கிறதா? தேர்தல் முடியும் வரை இதுபோல பல்வேறு நகைச்சுவைகளை நாம் பார்க்க வேண்டி இருக்கும்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!