யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலி தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

தஞ்சாவூரில் ஸ்டாலின்
தஞ்சாவூரில் ஸ்டாலின்

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் தொடங்கியுள்ளார். முதலில் திருச்சி மற்றும். பெரம்பலூர் தொகுதிக்கும், அதை தொடர்ந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிக்கும் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின், இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி தொகுதிக்கு தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள விஜய் வசந்த் மீண்டும் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் திருநெல்வேலி தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அந்த தொகுதியை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தென்காசியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மகன் அசோக், களக்காடு பால்ராஜ், பரப்பாடி வழக்கறிஞர் காமராஜ் ஆகியோர் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இவர்களுக்குள் கடும் போட்டு நிலவுவதால் வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் தலைமை திணறி வருகிறது.

இந்தநிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று மாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடக்கும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளுக்கான காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஆனால் திருநெல்வேலிக்கு இதுவரையிலும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அவர் யாருக்கென்று அந்த கூட்டத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் மாலையில் பிரச்சாரக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவார் என்பதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி யாரை அறிவித்தாலும் சீட் கேட்டு காத்திருக்கும் மற்றவர்கள் அதிருப்தி அடைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் பேசப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in