முன்னாள் பிரதமர் கட்சிக்கு மூன்றே இடங்கள் ஒதுக்கீடு... அதிலும் முந்நூறு குழப்பங்கள்!

குமாரசாமி - தேவகவுடா
குமாரசாமி - தேவகவுடா

மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிலும் ஏராளமான குழப்பங்கள் எழுந்ததில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் கதிகலங்கியுள்ளனர்.

ஹெச்.டி.தேவகவுடா 1996-97-ல் சுமார் 11 மாதங்கள் இந்தியப் பிரதமராக இருந்தவர். முன்னதாக கர்நாடக மாநிலத்தின் முதல்வராகவும் இருந்திருக்கிறார். தற்போது 91 வயதாகும் தேவகவுடா, மதசார்பற்ற ஜனதாதளம்(ஜேடிஎஸ்) கட்சியின் தேசியத் தலைவராக கர்நாடக மாநிலத்துக்குள் சுருண்டிருக்கிறார். இவரது மகனும் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறார்.

பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா
பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா

தேர்தல்தோறும் கூட்டணிகளுக்கு இடையே கூடுவிட்டு கூடுபாய்வது ஜேடிஎஸ் கட்சியின் வாடிக்கையாக இருக்கும். ’கர்நாடகத்தில் ஜேடிஎஸ் கட்சி எங்கே இருக்கிறது?’ என்று நடப்பு காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கிண்டலடிக்கும் வகையில் அங்கே கட்சி தேய்ந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்ததில், மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடிஎஸ் இணைந்துள்ளது. பரம வைரியாக இருந்த பாஜகவுடன் ஜேடிஎஸ் தலைவர்கள் திடீர் கூட்டணி வைத்தபோதும், தொண்டர்கள் மத்தியிலான விரோதம் இன்னமும் அடங்கியபாடில்லை.

இந்த சூழலில் 28 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய கர்நாடகத்தில், 25 தொகுதிகளை பாஜக எடுத்துக்கொண்டு 3 தொகுதிகளை மட்டுமே ஜேடிஎஸ் கட்சிக்கு ஒதுக்கியது. அந்த மூன்றும் தேவகவுடா குடும்பத்தினர் போட்டியிடவே போறாது. ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அண்மையில் அறிவித்திருந்த தேவகவுடா, கட்சியின் சுகவீனம் கருதி மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். 91 வயதாகும் அவர் பொறுப்புகளை தீவிரமாக கையாள்வதில், மகன் குமாரசாமி தனக்கான முக்கியத்துவம் கட்சியில் குறைவதாக அதிருப்தியில் இருக்கிறார்.

ஜேடிஎஸ் கட்சிக்கு மாண்டியா, கோலார் மற்றும் ஹாசன் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, ஹெச்.டி.குமாரசாமி தனது உடல்நலம் காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்திருந்தார். ஹெச்.டி.தேவேகவுடாவின் பேரனும், ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஹாசன் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மாண்டியா தொகுதியை கேட்டு தந்தையை நெருக்கி வந்தார். குமாரசாமியும் மகனுக்கு வழிவிட்டு ஒதுங்க யோசித்தார். ஆனால் மாண்டியாவில் வலுவான எதிர் வேட்பாளர்கள் களம் காண்பதால் பாஜக கூட்டணி நிகிலுக்கு சிவப்புக் கொடி காட்டியது.

ரேவண்ணா - தேவகவுடா - குமாரசாமி
ரேவண்ணா - தேவகவுடா - குமாரசாமி

இதனால் பெரும் அழுத்தத்துக்குப் பின்னரே மாண்டியா தொகுதியில் நிற்க குமாரசாமி சம்மதித்து இருக்கிறார்.கடந்த தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமலதா அம்பரீஷ், பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பாக அத்தொகுதியில் போட்டியிட விரும்பினார். அதற்காக அமித் ஷா உடன் சந்திப்பு வரை முன்னேறினார். ஆனால் சுமலதாவிடம் ஆதரவை பெற்றுக்கொண்ட பாஜக, அவரை வேட்பாளராக்க வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. எனவே நடிகை சுமலதா மீண்டும் அங்கே களமிறங்க இருக்கிறார்.

இந்தப் பகுதி ஆளும் காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு செல்வாக்கானது என்பதால் அவருடைய ஆசிர்வாதத்தில் அங்கே வெங்கடரமண கவுடா என்பவரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. மூன்றாவதாக, கோலார் தொகுதியின் ஜேடிஎஸ் வேட்பாளராக எம்.மல்லேஷ் பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கேயும் கவுடா குடும்பத்தினர் குறிவைக்க, கட்சியினர் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பு கவுடா குடும்பத்தினரை பின்வாங்கச் செய்திருக்கிறது. அரைமனதாய் குமாரசாமி மாண்டியாவில் நிற்பதும், கோலார் தொகுதியில் கட்சியினர் இடையே முழுமனதாய் கோளாறுகள் தென்படுவதும், ஹாசன் தொகுதியிலும் அதிருப்திகள் தலைதூக்குவதும் கவுடா குடும்பத்தினர் இடையே கவலை அதிகரித்துள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலருக்கும் வாய்ப்பில்லாது போனதிலும் ஜேடிஎஸ் கட்சியில் புதிய குழப்பங்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in