பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், தனது 91வது பிறந்தநாளினை முன்னிட்டு தேவ கவுடா இன்றைய தினம் மவுனம் கலைந்திருக்கிறார்.
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவ கவுடா, இன்றைய தினம் 90 ஆண்டுகளை நிறைவு செய்து 91வது பிறந்தநாளில் அடியெடுத்துள்ளார். அவரது பிறந்தநாளினை குடும்பத்தாரும், கட்சியினரும் பிரம்மாண்டமாக கொண்டாட பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்த நிலையில், அவற்றைத் தவிர்க்குமாறு அண்மையில் தேவ கவுடா உத்தரவிட்டார். மேலும், வெளியில் தலைகாட்ட இயலாத வகையில் வீட்டினுள் முடங்கிப் போயிருக்கிறார் தேவ கவுடா. அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அதையொட்டி எழுந்திருக்கும் அரசியல் புகார்களே அவற்றுக்கு காரணம்.
நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் களமிறங்கியது. ஆனால் ஹாசன் தொகுதி எம்பியும், இந்த தேர்தலின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு அனைத்தையும் புரட்டிப்போட்டது. பிரஜ்வல் ரேவண்ணா தனது வீடு மற்றும் அலுவலகத்தில் ஏராளமான பெண்களுக்கு எதிராக நடத்திய பாலியல் வக்கிரங்களின் வீடியோ தொகுப்பு, பொதுவெளியில் பரவி கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடி பதிலளிக்குமாறு எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கும் ஆளானார்கள்.
சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை நிரூபணம் செய்ய, திடீரென அவர் தலைமறைவானார். அவர் ஜெர்மனியில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவரை பிடிப்பதற்காக இன்டர்போல் உதவியுடன் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவ கவுடா மூத்த மகனும் எம்எல்ஏவுமான ரேவண்ணா, மகன் பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த முயன்ற குற்றச்சாட்டில் கைதாகி ஜாமீனில் வெளியாகி இருக்கிறார். தேவ கவுடாவின் இன்னொரு மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் கொந்தளிப்பில் உள்ளார்.
இவற்றின் மத்தியில் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் வெடித்தது முதலே அமைதியில் ஆழ்ந்திருந்த தாத்தா தேவ கவுடா இன்று வாய் திறந்திருக்கிறார். 91வது பிறந்த நாளில் இன்று அடியெடுக்கும் தேவகவுடா அதையொட்டி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து கருத்து பகிர்ந்திருக்கிறார். ”பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களின் பெயர்களை இப்போது நான் வெளிப்படுத்துவதாக இல்லை. ஆனால் வழக்கு விசாரணையில் அவர்கள் உட்பட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
குஸ்தி களமான நாடாளுமன்றம்... எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை; அதிர்ச்சி வீடியோ!
வரலாற்றில் இடம் பிடித்த கணினி ஆபரேட்டர்... 5 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கினார்!
இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!
அமெரிக்காவில் மாஸாக உருவாகும் ‘GOAT'... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!