வரலாற்றில் இடம் பிடித்த கணினி ஆபரேட்டர்... 5 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கினார்!

ஊழல் தடுப்பு பிரிவு
ஊழல் தடுப்பு பிரிவு

விவசாயிகளுக்கு அரசின் வருவாய் ஆவணங்களை வழங்க 5 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தேநீரின் விலையே 15 ரூபாய்க்கு விற்கும் போது 5 ரூபாய்க்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது என்று நினைக்கலாம். ஆனால், அந்த 5 ரூபாய் தான், குஜராத் மாநிலத்தில் ஒரு அரசு ஊழியரின் கையில் விலங்கிட காரணமாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

5 ரூபாய்
5 ரூபாய்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் நவீன் சந்திரா நகும்(46). இவரிடம் அரசின் வருவாய் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகள் மனு செய்தனர். அவர்களிடம் ஆவணங்களை வழங்க நவீன் சந்திரா 5 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதாவது விசிஇ படிவம், 7ஏ, 12 மற்றும் உரிமைக்கடிதம் 6 ஆகியவற்றைக் கேட்ட விவசாயிகளிடம் ஒவ்வொரு ஆவணத்திற்கும் தலா 5 ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று நவீன் சந்திரா கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தனர். இதையடுத்து விவசாயிகளிடம் ரசாயனம் தடவிய ரூபாயை ஏசிபி அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர். பஞ்சாயத்து அலுவலகத்தில் நவீன் சந்திராவிடம் நேற்று அவர்கள் அந்த பணத்தை லஞ்சமாக வழங்கினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நவீன் சந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து ராஜ்கோட் ஏசிபி உதவி இயக்குநர் கே.எச்.கோஹில் கூறுகையில், " மோர்கண்டாவில் வசிக்கும் நவீன் சந்திரா, கிராம பஞ்சாயத்து அலுவலக கணினி ஆபரேட்டராக தினமும் இரண்டு மணி நேரமே வேலை செய்துள்ளார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். அரசு ஆவணங்கள் கேட்கும் விவசாயிகளிடம், ஒவ்வொரு ஆவணத்திற்கும் 5 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் வந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் தலைமையிலான குழுவினர் நவீன் சந்திராவை கையும், களவுமாக கைது செய்துள்ளனர். குஜராத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகச்சிறிய லஞ்சம் வாங்கியதாக நவீன் சந்திரா பெருமை பெற்றுள்ளார். மிகக்குறைவான தொகை இருந்த போதிலும், இந்த லஞ்சம் ஊழலின் பரவலான தன்மையை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in