5 மாநில சட்டமன்றத் தேர்தல்; காங்கிரஸின் ’கை’ ஓங்குமா?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. மற்ற இரண்டில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கான ட்ரைலராகப் பார்க்கப்படும் இந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸின் கை ஓங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இப்போது முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. இங்கு ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறி மாறி வருவதால் அந்த ஃபார்முலா படி இம்முறை சிக்கலே இல்லாமல் வெல்லலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் போராடி வருகிறது.

காங்கிரஸில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நிலவும் மோதல் போக்கு அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதையே பாஜக பிரச்சாரமாகவும் செய்து வருகிறது. அதேபோல காங்கிரஸுக்கு இணையாக பாஜகவிலும் கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லை. பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஓரங்கட்டப்பட்டுள்ளதால், அவரின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்கவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. ராஜஸ்தான் தேர்தல் கடும் சவால் நிறைந்ததாக மாறினாலும், சர்வேக்களின்படி பாஜகவே முன்னணியில் உள்ளது.

அசோக் கெலாட் ராகுல் காந்தி 
சச்சின் பைலட்
அசோக் கெலாட் ராகுல் காந்தி சச்சின் பைலட்

சத்தீஸ்கரில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இப்போதும் பலமாக உள்ளது. இதனை உடைத்து வெற்றி பெறும் திட்டத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகலின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. அம்மாநில காங்கிரஸ் துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அதிருப்தியில் இருந்தாலும், பாகல் தலைமையில் பணியாற்ற தொடங்கிவிட்டார். எப்படியும் இம்முறை சத்தீஸ்கரை கைப்பற்றும் திட்டத்துடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆனாலும், இங்கே காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன.

மத்திய பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது, அவர்களிடமிருந்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மும்மரமாக உள்ளது. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி எந்த உட்கட்சி பூசலுமின்றி தேர்தலை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கட்டம்கட்டப்படுவதால், அங்கே உட்கட்சி பூசல் வெடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கடும் போட்டி நிலவினாலும், மபியில் காங்கிரஸ் வெற்றிக் கோட்டைத் தொடும் என சர்வே முடிவுகள் சொல்லுகின்றன.

அமித் ஷா, மோடி, ஜேபி நட்டா
அமித் ஷா, மோடி, ஜேபி நட்டா

தெலங்கானாவில் இப்போது சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்முறை இங்கு ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் பிஆர்எஸ்ஸுக்கு கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது. பாஜகவுக்கு இங்கே ஓரளவு செல்வாக்கு இருந்தாலும், நேரடி போட்டி பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையேதான். இம்முறை காங்கிரஸ் வெல்லும் என சில கருத்துக்கணிப்புகளும், பிஆர்எஸ் ஆட்சியை தக்கவைக்கும் என சில கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன.

மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கே காங்கிரஸுக்கும் செல்வாக்கு உள்ளது. மிசோரம் மக்கள் முன்னணியும் முக்கிய கட்சியாக உருவெடுத்திருப்பதால் இம்முறை மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. கருத்துக்கணிப்புகள், இழுபறியான முடிவுகள் வரலாம் என்கின்றன.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இப்போது காங்கிரஸ் இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி உள்ளது. எனவே, நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் ஏதேனும் 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினால் அது 2024 மக்களவைத் தேர்தலுக்கு பெரும் ஊக்கம்தருவதாக இருக்கும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி இம்முறை சாதிவாரி கணக்கெடுப்பு எனும் முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. “10 மாநிலங்களில் ஆளும் பாஜக ஒரே ஒரு ஓபிசி நபரையே முதல்வராக்கியுள்ளது” என சமீபத்தில் ராகுல் காந்தி பேசியது விவாதங்களை உருவாக்கியுள்ளது. பெரும்பான்மையாக உள்ள ஓபிசி வாக்குகளை கைப்பற்றும் திட்டத்துடன் காங்கிரஸ் இறங்கியுள்ளது பாஜகவை கலக்கமடையவே செய்துள்ளது.

‘கர்நாடக பார்முலா’வில் பெண்களுக்கு ஊக்கத்தொகை, சிலிண்டர் விலை 500 ரூபாய், 100 யூனிட் இலவச மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது காங்கிரஸ். இந்த வாக்குறுதிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவிய உட்கட்சி பூசல்களையெல்லாம் சரிக்கட்டி அனைவரையும் ஒருமுகமாக தேர்தலை சந்திக்க வைத்துள்ளது காங்கிரஸ் தலைமை. முக்கியமாக, ராகுல் காந்தியின் இமேஜ் முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளதாக காங்கிரஸார் நம்புகின்றனர். எனவே, 5 மாநில தேர்தலில் இம்முறை சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது காங்கிரஸின் கணக்காக உள்ளது.

தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி, இந்த 5 மாநில தேர்தல்களில் ஒன்றுசேருமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர் மாநிலங்களில் முழு பலத்துடன் போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அப்படியிருக்கையில் இது பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மேலும், இந்தப் போக்கு நாளடைவில் இந்தியா கூட்டணியில் பல்வேறு விரிசல்களையும் உருவாக்கும் என சொல்லப்படுகிறது.

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவை பாஜகவின் கோட்டையாக கருதப்படும் ‘இந்தி பெல்ட்’ மாநிலங்கள். எனவே இம்மாநிலங்களில் இயல்பாகவே பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம். இம்மாநிலங்களில் இம்முறை பிரதமர் மோடியே முக்கிய முகமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் ட்ரைலர் போலவே இந்த தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. முக்கியமாக, எதிர்க்கட்சிகளின் ஊழல், வளர்ச்சி, குடும்ப அரசியல், இந்துத்துவா போன்ற விவகாரங்களை வைத்து இப்போது தீவிரமான பரப்புரையில் பாஜக இறங்கிவிட்டது.

இந்த 5 மாநில தேர்தல்கள் என்பது காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் அக்னி பரீட்சைதான். இதில் வெல்பவர்கள் உற்சாகத்துடன் 2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராவார்கள். எனவே, வெற்றியை தக்கவைக்க பாஜகவும், தட்டிப்பறிக்க காங்கிரஸும் கடுமையான போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in