இந்திய சுதந்திரப் போரில் தோழர் என்.சங்கரய்யா!

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யா

தோழர்.சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. அந்த தனி மனிதர் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வரலாறு பெரிய அளவில் நினைவு கூரத்தக்கது.

அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று. படிப்பா, நாட்டின் விடுதலையா என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. அப்போது படிப்பைத் துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்.

தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை மற்றும் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்.

மதுரை சதிவழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் சங்கரய்யா நாட்டுக்கு விடுதலை கிடைத்த போதுதான், 1947 ஆகஸ்ட் 14-ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மாவீரன் பகத்சிங்கும் அவரது சக தோழர்கள் ராஜகுருவும் சுகதேவும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும் நாடே கொதித்து எழுந்தது. தூத்துக்குடி நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ராஜமாணிக்கமும், சங்கரய்யாவும் கண்டனர்.

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யா

அமெரிக்கன் கல்லூரி மாணவர் மன்றத்தின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்றத்தின் சார்பில் ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வடக்கு மாசி வீதியில் இருந்த சசிவர்ணத் தேவர் வீட்டில் சந்தித்தார்.

அவர் கல்லூரி நிலைமை, மாணவர்களின் மனநிலை உள்ளிட்ட விஷயங்களைக் கேட்டார். பின்னர் முத்துராமலிங்கத் தேவர், அவருக்கு நாட்டு நிலைமையை எடுத்துரைத்தார். நிறைவாக பிரதர், நல்லா படிங்க. நாங்க இருக்கிறோம், பார்த்துக்கொள்கிறோம் என்று உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதய்யர் தலைமையில் கோயில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு வைதீக பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முத்துராமலிங்கத் தேவரை சந்தித்து வைத்தியநாதய்யர் உள்ளிட்ட தலைவர் ஆதரவு கேட்டனர். அப்போது கோயில் நுழைவை எதிர்ப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை முத்துராமலிங்கத் தேவர் விடுத்தார்.

இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் அம்மன் சன்னதி வாசலில் இருந்து கண்டு களித்தனர்.

சுதந்திரப் போராட்ட தகிப்பின் காரணமாக மதுரையில் மாணவர் சங்கம் உருவானது. மதுரை ரீகல் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் பாரிஸ்டர் இளம் கம்யூனிஸ்ட் மோகன் குமாரமங்கலமும், என்.சங்கரய்யாவும் உரையாற்றினர். நிறைவாக, மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம் என்று பொறிக்கப்பட்ட மாணவர் சங்க கொடியேந்தி அமெரிக்கன் கல்லூரியில் இருந்து மாசி வீதிகள் வழியாக சென்ற பேரணி ஜான்சிராணி பூங்காவை அடைந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மாணவர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. சங்கரய்யாவின் உத்வேகமிக்க செயல்பாட்டால் மாணவர் சங்கம் செல்வாக்கு பெறத் தொடங்கியது. 

இதன் தொடர்ச்சியாக மதுரை  சென்ட்ரல் திரையரங்கில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறப்புரையாற்றினார். மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை வி.இராமநாதன், ஏ.செல்லையா, எஸ்.செல்லையா, எஸ்.குருசாமி, கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், மாணவர் சங்கரய்யா ஆகிய ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது.

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யா

சமூக சீர்திருத்தம், கடவுள் மறுப்பு என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருந்த சங்கரய்யா. தேச விடுதலை என்ற லட்சியத்தால் தேசிய இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டு, பூரண சுதந்திரம் எனும் கம்யூனிஸ்டுகளின் முழக்கம், அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பும் மார்க்சியம் மட்டுமே மனித குலத்திற்கு வழிகாட்டும் என்ற புரிதலைத் தந்தது. இதனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை ஆங்கிலேய அரசாங்கத்தால் ஏவி விடப்பட்டது. இதனைக் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையாவுடன் மாணவர் தலைவர் என்.சங்கரய்யாவும் உரை நிகழ்த்தினர்.

ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 15 நாட்களுக்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றியது. இதனால் 15 நாட்களில் தேர்வு எழுத இருந்த சங்கரய்யா படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சிறையில் ஏ,பி பிரிவு என்று அரசியல் கைதிகளிடையே பாகுபாட்டைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.  சிறைவாசம் என்பது ஒரு அரசியல் பள்ளியாக மாறியது. அங்கு ஏராளமான அரசியல் வகுப்புகள் நடைபெற்றன. ஆங்கிலத்திலும், தமிழிலும் அற்புதமாக பேசும் ஆற்றல் படைத்தவராக திகழ்ந்தார். சங்கரய்யாவைத் தவிர அனைவருக்கும் விடுதலை என அப்போது அறிவிக்கப்பட்டது. 

சென்னை ராயப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையூர் தோழர்களின் தூக்குத் தண்டனையை மாற்றக்கோரி ஆவேசமான உரையை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மதுரையில் 1940-ம் ஆண்டு மே தினம் சிறப்பான ஊர்வலத்துடனும் வைகை ஆற்றில் பொதுக்கூட்டத்துடனும் நடைபெற்றது.  அதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், குருசாமி, கே.பி.ஜானகி, என்.சங்கரய்யா ஆகியோர் உரை நிகழ்த்தினர். வெள்ளையனே வெளியேறு முழக்கமிட்டு மதுரை கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சங்கரய்யா தலைமையில் மாபெரும் ஊர்வலத்தை நடத்தினர்.

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யாasus

திருநெல்வேலி சென்றிருந்த சமயத்தில் இந்துக் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்தனர். இந்நிலைமையை சமாளிக்க சேவியர் மற்றும் ஜான்ஸ் கல்லூரி சென்றார். அவர்களிடம் பேசி சுமூகமான முறையில் ஊர்வலம் நடத்த ஒப்புக் கொள்ளச் செய்தார்.

ஆனால், சங்கரய்யா பேச்சை மீறி, காவல்துறை கடுமையான தடியடி பிரயோகம் செய்தது. அவர் குண்டாந்தடியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பல மாணவர்களின் மண்டை உடைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

காங்கிரஸ்காரர்களை கம்யூனிஸ்ட்களுடன் சேர்த்து வைப்பது ஆபத்தானது என்றும், அவர்கள் காங்கிரஸ்காரர்களையும் மாற்றி விடுவார்கள் என்றும் காவல்துறை அறிக்கை கூறியது.  அதனால் சங்கரய்யா கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். மதுரை, வேலூர், கண்ணனூரை தொடர்ந்து தஞ்சாவூர் சிறையில் அடைக்கப்பட்டார். சுந்தரம் அடைவதற்கு முதல் நாள்  நீதிபதி ஹசீம் 1947 ஆகஸ்ட் 14 அன்று இரவு சிறைக்கு வந்து இவரை  விடுதலை செய்தார்.

விடுதலை பெற்று வந்து, மதுரை திலகர் திடலில் போராடிப் பெற்ற சுதந்திரத்தை என்.சங்கரய்யா கொண்டாடினார். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நிரந்தரமாக நீங்காத இடம் பெற்றிருக்கிறார் தோழர் சங்கரய்யா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in