புதுச்சேரியில் பாஜக வேட்பாளரே போட்டி... ரங்கசாமியின் பேச்சால் தொண்டர்கள் வேதனை!

கட்சி விழாவில் உரையாற்றும் ரங்கசாமி
கட்சி விழாவில் உரையாற்றும் ரங்கசாமி

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவரே நிறுத்தப்படுவார் என்பது  முதல்வர் ரங்கசாமியின் பேச்சால் உறுதியாகியிருக்கிறது.

ரங்கசாமியை வரவேற்கும் முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா
ரங்கசாமியை வரவேற்கும் முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக  கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால் , என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தான் இந்தமுறை மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் காலியான  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவுக்கு ரங்கசாமி விட்டு தந்திருந்தார். அதனால் மக்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் இதுகுறித்து ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் முதல்வர் ரங்கசாமியின் இன்றைய பேச்சு புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் தான் போட்டியிடப் போகிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் தொடங்கி 13 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் 14 ம் ஆண்டு தொடக்க விழா இன்று புதுச்சேரி ஈசிஆர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி "வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நமது ஆட்சியில் நாம் மக்களிடம் சொன்னதை செய்துள்ளோம். அதனை மக்கள் முன்னர் எடுத்து கூற வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

நமது கூட்டணி வேட்பாளரை நாம் ஒன்றாக இணைந்து ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நமது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்புவோம்" எனப் பேசியுள்ளார். இதன் மூலம், பாஜக போட்டியிட முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாறாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தான் கூறும் பாஜக வேட்பாளரைத்தான் புதுச்சேரியில் நிறுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று ஆவலோடு காத்திருந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இதனால் வேதனை அடைந்துள்ளனர்.

தற்போது புதுவை துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனை புதுச்சேரியில் பாஜக வேட்பாளராக  போட்டியிட வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in