தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை! குடிநீர், கழிவு நீர் புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் மேயர் பிரியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் மேயர் பிரியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கணிசமான மழை பெய்த நிலையில், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது கழிவுநீர் ஓடைகள் மற்றும் பாதாள சாக்கடை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். தொடர்ந்து மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதை சீர் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினர்.

வடகிழக்கு பருவமழையின் போது, குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு மையம் திறப்பு
வடகிழக்கு பருவமழையின் போது, குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு மையம் திறப்பு

முன்னதாக சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை, தலைமை இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களிடம் வரும் அழைப்புகளை ஏற்று துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

இதனிடையே குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அவ்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,149 களப்பணியாளர்களுடன், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in