அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற் உத்தவிட்டுள்ளது. அதேசமயம், ”தனி நீதிமன்ற ஏற்கெனவே விதித்த தடை உத்தரவு தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என தெரிவித்துள்ளது.
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா... இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த மனுவில், 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ள தாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ள ஓபிஎஸ், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த வழக்கு கடந்த வந்து நிகழ்வுகளை கூறினார். இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்கக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ”இரட்டை சின்னம் கேட்டு ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை. அதேசமயம் இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என தெரிவித்து வழக்கு விசாரணைையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!