நீங்கள் முன்பு பாஜகவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினீர்கள். இப்போது அவர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இருக்கட்டும், நீங்கள் மோடிக்கு எதிராக உயர்த்திய கொடியை இனி உங்கள் மருமகனாகிய நான் ஏந்துவேன் என்று நிதிஷ் குமாரை ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி. அந்த தேர்தலில் நிதிஷின் கட்சி வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் நிதிஷ்குமாரை முதல்வராக்கியது பாஜக.
தொடர்ந்து 2022-ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்து, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார் நிதிஷ் குமார். அப்போது மீண்டும் நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்ற நிலையில், துணை முதல்வராக தேஜஸ்வி பொறுப்பேற்றார்.
இந்த சூழலில் கடந்த மாதம் 28-ம் தேதி பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சட்டப்பேரவையில் பேசினார். அவரது பேச்சு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அவையில் பேசிய தேஜஸ்வி, “நான் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு எதிராக நிற்கிறேன். முதலில் நிதிஷுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் 9-வது முறை முதல்வராக பதவி பிரமாணம் ஏற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவிப் பிரமாணம் செய்யும் அற்புதமான காட்சியை இதுவரை நாங்கள் கண்டதில்லை.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ-க்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் பொதுமக்களிடம் பதில் சொல்ல வேண்டும். 'முதல்வராக நிதிஷ்குமார் ஏன் 3 முறை பதவிப் பிரமாணம் செய்தார்?' என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
முன்பு பாஜகவினரை விமர்சித்த நீங்கள், இப்போது அவர்களைப் புகழ்ந்து பேசுகிறீர்களே என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்?. இத்தனை முறை, கூட்டணி மாற்றம் செய்த நிதிஷ் குமார், இனியும் கூட்டணியில் மாற்றம் செய்ய மாட்டார் என பிரதமர் மோடியால் உறுதியளிக்க முடியுமா?
நாங்கள் உங்களை ஒரு குடும்ப உறுப்பினராக நினைத்தோம். நீங்கள் முன்பு பாஜகவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினீர்கள். இப்போது அவர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இருக்கட்டும், நீங்கள் மோடிக்கு எதிராக உயர்த்திய கொடியை இனி உங்கள் மருமகனாகிய நான் ஏந்துவேன். எதுவாக இருப்பினும் நாங்கள் முதல்வர் நிதிஷ் குமாருக்கு உரிய மரியாதையை செலுத்துவோம். ஆனால் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து எதிர்ப்போம்” என்று பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!