குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை
ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை
Updated on
2 min read

குழந்தைகள் மற்றும் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தண்டனையாக அவர்களின் விதைகளை நீக்கும், ஆண்மை நீக்க சட்டத்தை இயற்றியிருக்கிறது மடகாஸ்கர். இதனை வரவேற்றும், எதிர்த்தும் உலகம் முழுக்க விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

குழந்தைகள் மற்றும் சிறார் மீதான பாலியல் பலாத்காரம் என்பது மனித இனம் நாகரீகம் அடைந்ததை மறுக்கும் வகையிலேயே தொடர்ந்து வருகிறது. பாலியல் பலாத்காரத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலான சட்டங்களும், தண்டனைகளும் அதிகரித்து வருவதன் மத்தியில், குழந்தைகள் மற்றும் சிறார் மீதான பலாத்கார குற்றங்கள் வீரியமான தண்டனைகளை கோரி வருகின்றன. இந்த வகையில் மடகாஸ்கர் தேசம், ஆண்மை நீக்கம் தண்டனையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க தேசமான மடகாஸ்கர் தீவின் மொத்த மக்கள்தொகையே 3 கோடிக்குள் அடங்கிவிடும். ஆனால் அங்கே மாதந்தோறும் நூற்றுக்கும் மேலான குழந்தைகள் மற்றும் சிறார்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்தாண்டு 600க்கும் மேலான குழந்தை பலாத்காரங்கள் வழக்காக பதிவாக, இந்தாண்டு ஜனவரியில் மட்டுமே 133 வழக்குகள் பதிவாகி உள்ளன.

சிறார் பலாத்காரம்
சிறார் பலாத்காரம்

குழந்தை பலாத்காரங்களை அடையாளம் காண்பது கடினம்; அப்படியே அடையாளம் காணப்பட்டாலும், அவை புகாராக பொதுவெளியில் கொண்டு வருவதும் குறைவு. இந்த வகையில் குழந்தை பலாத்காரங்களின் எண்ணிக்கை, தரவுகளில் இருப்பதை விட பல மடங்கு அதிகம் என மடகாஸ்கர் அரசு அஞ்சுகிறது. எனவே அதிரடியாக ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதன்படி குழந்தை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆண்மை நீக்கம் செய்யப்படுவார்கள். அதிலும் பாதிக்கப்பட குழந்தையின் வயது 10க்கு உள்ளாக இருப்பின் குற்றவாளிகளுக்கு காஸ்ட்ரேஷன் அறுவைசிகிச்சை செய்யப்படும். 10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறார் மீதான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு, அறுவை சிகிச்சை அல்லது கெமிக்கல் காஸ்ட்ரேஷன் உண்டு. 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார் பாதிக்கப்பட்டால், ரசாயன காஸ்ட்ரேஷன் தண்டனை பாயும். இது தவிர்த்து கூடுதலாக ஆயுள் சிறை வரை கடுமையான தண்டனையும் தனியாக விதிக்கப்படும்.

காஸ்ட்ரேஷன் என்பது ஆணின் விதைகள் அகற்றப்படுவதை குறிக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் விதைகள் அகற்றப்படுவதால், ஆண்மைக்கான டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு நிரந்தரமாக நீக்கப்படுகிறது. இதுவே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது பாலியல் ஆசையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி, ஹார்மோன் சுரப்பைத் தடுப்பதாகும். மருந்துகளை நிறுத்துவது அல்லது மாற்று மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் இது பொதுவாக மீளக்கூடியது.

ஆனால் அறுவைசிகிச்சை காஸ்ட்ரேஷனில் இழந்த ஆண்மையை மீட்க முடியாது. அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா உள்ளிட்ட சில மாகாணங்கள் மற்றும் சில நாடுகள் கெமிக்கல் காஸ்ட்ரேஷன் தண்டனையை அனுமதிக்கின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே அவை நீதிமன்ற தீர்ப்புகளில் இடம்பெறுகின்றன.

சிறார் பலாத்காரம்.
சிறார் பலாத்காரம்.

மடகாஸ்கர் அதிரடியாக இயற்றியிருக்கும் ஆண்மை நீக்க சட்டத்தை பொதுவெளியில் பலரும் வரவேற்று வருகின்றனர். அதற்கு இணையாக எதிர்ப்புகளும் நிலவுகின்றன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பானது, ”காஸ்ட்ரேஷன் தண்டனை முறை ஒரு நாட்டின்அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முரணானது. மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான ஏற்பாடு” என்று கண்டித்துள்ளது. ’பாலியல் பலாத்கார குற்றங்களின் பின்னணியில் அவற்றை தடுப்பது மற்றும் வழக்கு விசாரணையில் உள்ள கடுமையான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை இது’ என்றும் அம்னெஸ்டி குற்றம்சாட்டுகிறது.

ஆண் - பெண் பரஸ்பர பாலியல் ஈர்ப்பு இயற்கையானது என்பதை ஏற்றுக்கொண்ட உலகம், தற்போதுதான் தன்பாலீர்ப்பு மற்றும் இச்சைகளை உணர முன்வந்திருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் பீடோபைல் எனப்படும் குழந்தைகள் மீதான ஈர்ப்பு மற்றும் இச்சைகளை கொண்டிருப்போரை அடையாளம் காண்பது, சிகிச்சை அளித்து சீர்படுத்துவது போன்றவற்றை இதுபோன்ற அதிரடியான சட்டங்கள் புறக்கணித்துவிடும் அபாயம் குறித்தும் மனித உரிமை அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. ஆனால் பொதுவெளியில் மடகாஸ்கரின் ஆண்மை நீக்க சட்டத்தை வரவேற்றும், அவை ஏனைய நாடுகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in