பச்சை குத்தியதை நீக்க முடியுமா... ஓபிஎஸ் வழக்கறிஞர் கேள்வி? நீதிபதிகள் நகைப்பு

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

தனி நீதிபதியின் உத்தரவால் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ளதை நீக்க முடியுமா?" என வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய நிலையில், “அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என நீதிபதிகள் நகைப்புடன் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 7-ம் தேதி விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ், அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என இடைக்கால தடை விதித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் வாதிடுகையில், "கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பிரதான வழக்கு நவம்பர் 30-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், "அதிமுகவில் மூன்று கொடிகள் உள்ளன. இதில், எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி வழக்கில் விளக்கம் அளிக்கவில்லை. அண்ணா விரல் காட்டுவதுதான் உண்மையான கொடி.எனவே, அதனை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார். லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவாக தனக்கு உள்ளது. அவர்கள் நீக்கப்படாத நிலையில், அவர்களுக்கும் எப்படி தடை விதிக்க முடியும். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ளனர். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவால் அதை நீக்க முடியுமா?" என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என நகைப்புடன் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கட்சியின் சொத்துகளான கட்சி கொடி, லெட்டர் பேடு ஆகியவை யாருக்கும் சொந்தமானதல்ல. எனவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தடையை நீக்கக் கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in