‘தினமொரு பொழுதுபோக்கு கதை பகிரும் ஆம் ஆத்மி’ டெல்லி ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

ஆம் ஆத்மி - பாஜக மோதல்
ஆம் ஆத்மி - பாஜக மோதல்

டெல்லி அரசைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி நடப்பதாக ஆம் ஆத்மி தெரிவித்த புகாருக்கு பாஜக பதிலடி தந்துள்ளது.

புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது முதலே நாளொரு அரசியல் பதற்றம், டெல்லி ஆம் ஆத்மி அரசை கலங்கடித்து வருகிறது. அவற்றில் ஒன்றாக தற்போது, ‘டெல்லி அரசைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி செய்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாக’ புதிய புகாரை ஆம் ஆத்மி தொடுத்தது.

அர்விந்த் கேஜ்ரிவால் உடன் அதிஷி
அர்விந்த் கேஜ்ரிவால் உடன் அதிஷி

"அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க நடக்கும் சதியின் அங்கமாக, எந்த ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் இருந்து சில விஷயங்களைப் பார்க்கும்போது, ​​​​நன்றாக திட்டமிட்டு இந்த திரைமறைவு சதிகள் அரங்கேறி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி தெரிவித்தார்.

’டெல்லியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாது பல மாதங்களாக தேக்க நிலையில் இருப்பதாகவும்’ அதிஷி கூறினார். "டெல்லியில் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை; டெல்லிக்குள் இடமாற்றமும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிகாரிகள் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டனர்" என்று அவர் மேலும் குறைபட்டார்.

கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்
கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

கேஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், பாஜக நடத்தும் சதியின் ஒரு பகுதி என்று அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஆம் ஆத்மியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்து வருகிறது. ”தினந்தோறும் ஒரு பொழுதுபோக்கு கதையை ஆம் ஆத்மி விவரித்து வருகிறது. இந்த கதைகள் எந்த வகையிலும் ஆம் ஆத்மிக்கு விடிவு தரப்போவதில்லை. அதே போன்று அதன் குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை” என பாஜக பதிலடி தந்துள்ளது.

திகார் சிறையில் இருக்கும் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, ஆம் ஆத்மியின் கவலைகளும், பாஜகவின் பாய்ச்சல்களும் ஒரு சேர அதிகரித்துள்ளன. அர்விந்த் கேஜ்ரிவால் சிறையில் அடைபட்டதும், ஆம் ஆத்மி கலகலத்து வருகிறது. அமைச்சர் முதல் நிர்வாகிகள் வரை, பாஜகவுக்கு தாவும் திட்டத்தில் ராஜினாமா செய்து வருகின்றனர்.

கட்சியின் தலைவர் சிறையில் இருக்கும்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதிலும் ஆம் ஆத்மி எம்பிக்கள் வரை தயக்கம் தென்படுகிறது. களத்தில் இறங்குவது மட்டுமன்றி, சமூக ஊடகங்களில் பதிவிடுவது வரை ஆம் ஆத்மி இரண்டாம் கட்டத் தலைவர்கள் பதுங்கி வருகின்றனர். இதனூடே பாஜகவின் பதிலடி வேகமும் அதிகரித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்?... மத்திய பாஜக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!

அமைச்சர் நேரு மகனுக்கு நெருக்கடி தரும் பாரிவேந்தர்... பெரம்பலூரில் சூரியனை நெருங்கும் தாமரை!

நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு சிக்கலா?... தேர்தல் அதிகாரி புகரால் பெரும் பரபரப்பு!

பாஜக வேட்பாளரால் சர்ச்சை... திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, குங்குமம் பூசியதால் பரபரப்பு!

அசாமில் அடித்து முன்னேறும் காங்கிரஸ்... கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பின்னடைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in