அமைச்சர் நேரு மகனுக்கு நெருக்கடி தரும் பாரிவேந்தர்... பெரம்பலூரில் சூரியனை நெருங்கும் தாமரை!

அருண் நேரு வாக்குசேகரிப்பு
அருண் நேரு வாக்குசேகரிப்பு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஐ.ஜே.கே தலைவர்  பாரிவேந்தர் களத்தில் திமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்.

பாரிவேந்தர் பிரச்சாரம்
பாரிவேந்தர் பிரச்சாரம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி நீண்டகாலமாக தனித் தொகுதியாகவே  இருந்துவந்தது.1951-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி இதுவரை 17 பொதுத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இந்த தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது. இது தனித் தொகுதியாக இருந்தபோது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.

2009-ம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டன.  பெரம்பலூரைத் தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. 

மகள் அருண்நேருவுக்கு அமைச்சர்  கே.என்.நேரு வாக்குசேகரிப்பு
மகள் அருண்நேருவுக்கு அமைச்சர் கே.என்.நேரு வாக்குசேகரிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு  தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து அவரே தாமரை சின்னத்தில் களமிறங்கியிருக்கிறார். இவரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் பிரச்சாரம் பலமாக உள்ளது. 

பிரதமர் மோடியின் செல்வாக்கு தனக்குக் கைகொடுக்கும் என்று  நம்பிக்கையுடன் தொகுதியை அவர் சுற்றி வருகிறார். கடந்த தேர்தலில் தனது சொந்த செலவில் அப்பகுதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி செய்வேன் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றிய பலத்துடனும், பண பலத்துடனும்  பிரச்சார களத்தில் அவர் தெம்பாகவே இருக்கிறார். 

பாரிவேந்தர் வாக்குசேகரிப்பு
பாரிவேந்தர் வாக்குசேகரிப்பு

திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு களமிறங்கியுள்ளார். நேருவின் மகன், இளைஞர் அணி,  கூட்டணி கட்சிகளின் பலம், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், வைகோ  போன்றவர்களின் பிரச்சார பலம்  என அவருக்கும் ஏராளமான சாதகமான அம்சங்கள் உள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள்  நிறைவேற்றப் பட்டுள்ளது எனச்சொல்லி களத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். நேரு என்ற அரசியல் ஜாம்பவான்  போட்டுத்தரும் கணக்குகள் தன்னை மக்களவைக்கு அனுப்பும் என்ற நம்பிக்கையில் அவரும் தெம்பாகவேதான் இருக்கிறார். 

அதிமுக  வேட்பாளராக என்.டி.சந்திரமோகன்  போட்டியிடுகிறார். எம்.ஜி.ஆர் மன்ற பெரம்பலூர் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் இவர், தொகுதியில் பெரிதாக அறிமுகம் இல்லாதவர். கட்சியினர் பலருக்கே இவரை அதிகம் தெரியவில்லை.  மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜின் தம்பி துரைராஜின் மகன் தான் இந்த சந்திரமோகன். முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆதரவு பலத்துடன், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் காணப்படுகிறார். ஆனாலும் பிரச்சாரம் நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது. கட்சிக்காரர்கள் கடமையாற்றி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேராசிரியர் தேன்மொழியை பொறுத்தவரை சீமான் என்ற பலத்துடனும், மாற்றத்தை விரும்பும் மக்களின் பலத்துடனும் களத்தில் இருக்கிறார். மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

மொத்தத்தில் பெரம்பலூர் தொகுதியில் 4 முனை போட்டி என்றாலும், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவி வருகின்றது. திமுகவுக்கு இணையாக பிரச்சாரம், பண விநியோகம், ஆட்கள் பலம் என அனைத்திலும் சம அளவு போட்டியைத் தந்துகொண்டிருக்கிறார் பாரிவேந்தர். ஆனாலும் கூட்டணி பலம், அமைச்சர் நேருவின் உத்திகள், தொகுதியில் அதிகமுள்ள திமுக வாக்காளர்கள், தமிழகத்தில் ஆளும் கட்சியின் செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக தாமரையைத்  தாண்டி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் உதிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in