அசாமில் அடித்து முன்னேறும் காங்கிரஸ்... கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பின்னடைவு!

அசாமில் அடித்து முன்னேறும் காங்கிரஸ்... கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பின்னடைவு!

மக்களவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவும்,  காங்கிரஸ் கட்சிக்கு முன்னேற்றமும் கிடைக்கும் என லோக் போல் நிறுனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மொத்தமுள்ள 14 தொகுதிகளில்   ஏப்ரல் 19-ம் தேதி 5 தொகுதிகளிலும், ஏப்ரல் 26-ம் தேதி 5 தொகுதிகளிலும், மே 7-ம் தேதி மீதமிருக்கும் 4 தொகுதிகளிலும்  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்ற பாஜகவும் காங்கிரஸும் கடும் போட்டியில் உள்ளன. 

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அங்குள்ள 14 இடங்களில் பாஜக 9 இடங்களை அள்ளியது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும்,  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும்,  சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றது. இந்தநிலையில் இந்தத் தேர்தலில் அந்த மாநிலத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மொத்தமுள்ள 14  தொகுதிகளில் பாஜக 7 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக லோக் போல் கருத்துக் கணிப்பில்  தெரியவந்துள்ளது.   காங்கிரஸ் கட்சி 4 முதல் 5 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இதர கட்சிகள் அங்கு 0 முதல் 2 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அசாமில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது மாநிலம் முழுவதும் பாஜக செல்வாக்கு குறைந்துள்ளது. பாஜகவின் தற்போதைய எம்.பி-க்கள் மீது அங்கு அதிருப்தி அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பெங்காலி இந்துக்கள் மற்றும் கோச் ராஜ்போங்ஷி ஆகியோரும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயத்தில்  அங்குள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரசுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது. சிஏஏ எதிர்ப்பு காரணமாக  அசாமில் காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும், அஹோம், முஸ்லிம் மற்றும் பழங்குடியினர் எனப் பல தரப்பினருக்கும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்துள்ளதால் அதுவும் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக மாறியுள்ளது.

பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால் தேர்தலுக்குள் அதனைச் சரிக்கட்டும் நடவடிக்கைகளை பாஜக விரைவாக தொடங்கி இருக்கிறது.  அதன் மூலம் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பாஜக திட்டமிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in