அமேதி, ரேபரேலி வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸ் இழுபறி... ரேபரேலியில் முந்தியது பாஜக

தினேஷ் பிரதாப் சிங்
தினேஷ் பிரதாப் சிங்

பெரும் எதிர்பார்ப்புக்குரிய அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருவதன் மத்தியில், ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளரை பாஜக அதிரடியாக இன்று அறிவித்தது.

உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகியவை காங்கிரஸ் கட்சியின் ஆஸ்தான தொகுதிகளாகும். காங்கிரஸ் பிரதமர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பல பெருந்தலைகள் இந்த தொகுதிகளில் இருந்தே தேர்வாகி உள்ளனர். ஆனால் இம்முறை இந்த தொகுதிகளில் வேட்பாளரை அறிவிபத்தில் காங்கிரஸ் தலைமை இழுபறிக்கு ஆளாகி உள்ளது. இந்த சூழலில் ரேபரேலி தொகுதிக்கான தனது வேட்பாளரை பாஜக இன்று அறிவித்துள்ளது. மாநில அமைச்சரும், கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலியில் நின்று சோனியா காந்தியிடம் தோற்றவருமான தினேஷ் பிரதாப் சிங் ரேபரேலி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் - பிரியங்கா
ராகுல் - பிரியங்கா

2004 முதல் ரேபரேலியில் சோனியா காந்தி வென்று வந்தார். இம்முறை மக்களவை தேர்தலை மறுத்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி மாறியுள்ளார். இவரை எதிர்த்து கடந்த முறை நின்ற தினேஷ் பிரதாப் சிங், இம்முறை ரேபரேலி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2010, 2016 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் உத்தர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக 3 முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் சோனியா காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதும், கணிசமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார்.

ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ரேபரேலி மட்டுமன்றி அமேதிக்கான வேட்பாளர்களையும் இன்னும் அறிவிக்காது காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. ரேபரேலி, அமேதி ஆகியவை காங்கிரஸ் கோட்டையாக நீடித்து வந்தபோதும், 2019 தேர்தலில் அமேதியில் களமிறங்கிய ராகுல் காந்தி பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றார்.

தினேஷ் பிரதாப் சிங்
தினேஷ் பிரதாப் சிங்

அமேதியைப் போன்றே ரேபரேலியிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு தோல்வியை தருவோம் என்று தினேஷ் சிங் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக பேசிய தினேஷ் சிங் ”ரேபரேலியில் இருந்து காந்திகள் விடை பெறுவது உறுதி என்று நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். பாஜகவின் தாமரை ரேபரேலியிலும் மலரும். 4 முறை எம்.பி.யாக இருந்த சோனியா காந்திக்கு எதிராகவும் நான் போராடினேன். அதனால் எனக்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி முக்கியமில்லை. எந்த காந்தி ரேபரேலிக்கு வந்தாலும், அவர்களை தோற்கடிப்பேன்” என்று ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தினேஷ் சிங் தெரிவித்தார்.

’ரேபரேலி வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்காதது ஏன் என்றும், அதற்குப் பதிலாக காங்கிரஸ் பெயரை அறிவிக்குமாறு அழுத்தம் கொடுப்பது ஏன்’ என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து ரேபரேலிக்கான தனது வேட்பளரை பாஜக இன்று அறிவித்து விட்டது. அநேகமாக நாளைக்குள் ரேபரேலி - அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in