பரபரப்பு... மும்பை பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை!

மும்பை பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன்
மும்பை பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன்

மாநகராட்சி அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உள்பட ஐந்து பேருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

அண்ணாமலையோடு தமிழ்ச்செல்வன்
அண்ணாமலையோடு தமிழ்ச்செல்வன்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சயான் கோலிவாடாவில் பாஜக சார்பாக எம்எல்ஏவாக இருப்பவர் தமிழ்ச்செல்வன். தமிழரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு கவுன்சிலராக இருந்தபோது சயான் கோலிவாடா பஞ்சாப் காலனியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பழைமையான கட்டடத்தில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.

அப்போது தமிழ்ச்செல்வன் தலைமையில் உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து மாநகராட்சி ஊழியர்களை பணியைச் செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது மாநகராட்சி ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

இதுதொடர்பாக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உட்பட ஐந்து பேர் மீது மாநகராட்சி ஊழியர்கள் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு எம்எல்ஏ, எம்.பி-க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும், ரூபாய் 13,500 அபராதமும் விதித்தார்.

அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அவர்களைத் தாக்கியதற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது போலீஸார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுமேஷ், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தண்டனை ஒருசார்பாக இருக்கக் கூடாது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடத்தையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து விட்டு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தனது தண்டனையை நிறுத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in