
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கெவாடியா பகுதியின் ஏக்தா நகரில் உள்ள உலகிலேயே உயரமான படேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி நாடெங்கும் தொடரும் நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக பிரதமர் மோடி பங்கேற்ற குஜராத் நிகழ்வு அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “இன்று என் கண்முன் மினி இந்தியாவின் வடிவம் தெரிகிறது. மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள் வேறுவேறாக இருந்தாலும், இங்கு அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறீர்கள். ஏக்தா நகருக்கு வரும் மக்கள் இந்த பிரமாண்ட சிலையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், சர்தார் படேலின் வாழ்க்கை, தியாகம் மற்றும் ஒற்றுமையான இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் அறிகிறார்கள்.
நாடு முழுவதும் 'ஒற்றுமைக்கான ஓட்டத்தில்' லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். 140 கோடி இந்தியர்களிடையே இந்த ஒற்றுமை ஓட்டத்தைப் பார்க்கும்போது, சர்தார் படேலின் லட்சியங்கள் நமது ரத்தத்தில் ஓடுவது தெரிகிறது.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில், நம் இந்தியாவை செழிக்கச் செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பான 25 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவுக்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்கள். இப்போது, அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு ஒரு வாய்ப்பாக கிடைத்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைத்தால் 2047-ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும்.
இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் உள்ளது. சந்திரனின் தென்துருவத்தில் முதன்முதலில் விண்கலத்தை தரையிறக்கி ஆராய்ச்சி செய்துள்ளோம். பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
தேஜஸ் போர் விமானங்கள் முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் வரை அனைத்தையும் இந்தியாவே தயாரித்து வருகிறது. நமக்குள் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வோடு நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் கர்வம் கொள்வோம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!