88 தொகுதிகள், 16 கோடி வாக்காளர்கள், 1202 வேட்பாளர்கள்... 2-ம் கட்ட வாக்குப்பதிவு பரபர!

கர்நாடக மாநிலத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்காக கூடிய பெண் வாக்காளர்கள்
கர்நாடக மாநிலத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்காக கூடிய பெண் வாக்காளர்கள்

மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவான இன்று, 88 தொகுதிகளின் சுமார் 16 கோடி வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டு, களத்திலுள்ள 1202 வேட்பாளர்களில் உரியவருக்கு வாக்களித்து வருகின்றனர்.

இன்று(ஏப்.26), 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடர இருக்கிறது. கடும் வெயில், வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களினால் வாக்குப்பதிவு குறையக்கூடும் என்பதால், அரசியல் கட்சிகள் முதல் தேர்தல் ஆணையம் வரை வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை கவலையோடு கண்காணித்து வருகின்றனர்.

அசாமில் இன்று வாக்களிக்க காத்திருக்கும் நீண்ட வரிசை
அசாமில் இன்று வாக்களிக்க காத்திருக்கும் நீண்ட வரிசை

இன்றைய தினம் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துவருகின்றன. ஆனபோதும், ஆரம்பத்தில் 89 தொகுதிகளுக்கே தேர்தல் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் எதிர்பாரா மரணம் காரணமாக மத்தியப் பிரதேசத்தின் பெட்டூலில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரளா தனது அனைத்து தொகுதிகளுக்கும்(20) வாக்குப்பதிவினை இன்று எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 14 இடங்கள் மற்றும் அஸ்ஸாம், பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் கணிசமான தொகுதிகளில் இன்றைய வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவற்றுடன் ஜம்மு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

1,098 ஆண்கள், 102 பெண்கள் உட்பட 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் வாக்காளர்களில் 8.08 கோடி ஆண்கள், 7.8 கோடி பெண்கள் மற்றும் 5,929 மூன்றாம் பாலினத்தோர் வாக்களித்து வருகின்றனர். இவர்களில் 34.8 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். மேலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14.78 லட்சம், 100 வயதுக்கு மேற்பட்டவர்களில் 42,226 வாக்காளர்கள் மற்றும் 14.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இந்த 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்களித்துள்ளனர்.

மதுரா பாஜக வேட்பாளர் ஹேமமாலினி - வயநாடு காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி
மதுரா பாஜக வேட்பாளர் ஹேமமாலினி - வயநாடு காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி

இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 88 தொகுதிகளில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி(காங்கிரஸ்), உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் ஹேமமாலினி(பாஜக), ராஜஸ்தான் கோட்டாவில் ஓம் பிர்லா(பாஜக), பெங்களூரு தெற்கு தேஜஸ்வி சூர்யா(பாஜக) என பல்வேறு நட்சத்திர தொகுதிகள் கவனம் ஈர்த்துள்ளன. இவர்களுக்கு அப்பால், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேரளத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரை எதிர்கொள்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் தொகுதியில் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலத்தில் அதன் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மாண்டியா தொகுதியில் இருந்தும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு தொகுதியில் இருந்தும் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராமராக வலம் வந்த அருண்கோவில், பாஜகவின் கோட்டையான உபி மீரட் தொகுதியில் அக்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in