கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

ராகுல் காந்தி, சசி தரூர், ராஜீவ் சந்திரசேகர்
ராகுல் காந்தி, சசி தரூர், ராஜீவ் சந்திரசேகர்

கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. ஆனால் கேரளாவில் அதற்கு மாறாக சிபிஎம் தலைமையிலான ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய செயலாளர் ராஜாவின் மனைவி, ஆனி ராஜாவும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதே தொகுதியில் பாஜகவின் மாநில தலைவர் சுரேந்திரனும் களமிறங்கி இருக்கிறார். இதனால் இந்த தொகுதி தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சொந்த ஊரான கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கொல்லம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் கிருஷ்ணகுமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகர் முகேஷும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் பிரேமசந்திரனும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார்.

கேரளாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
கேரளாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தாமதமாக துவங்கியது. இருப்பினும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in