‘இந்தியர்களை பணியமர்த்த எங்களை விரட்டுகிறார்கள்’ டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஊழியர்கள் போர்க்கொடி

டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளில், அமெரிக்க ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடங்களில் ஹெச்1-பி விசாவில் இந்தியர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக பணியிழந்தோர் புகார் தெரிவிக்கின்றனர்.

டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ’டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ (டிசிஎஸ்), உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமாக பங்களித்து வருகிறது. அமெரிக்காவின் பிரம்மாண்ட ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாகவும் டிசிஎஸ் கோலோச்சி வருகிறது.

டிசிஎஸ்
டிசிஎஸ்

இதனிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள் சிலர் அந்த நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் இனம் மற்றும் வயது அடிப்படையில் சட்டவிரோத பாகுபாடு காட்டி, தங்களை முறைகேடாக பணியிலிருந்து நீக்கிவிட்டதாக, அந்த அமெரிக்க முன்னாள் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறுகிய அறிவிப்பின் பேரில் பணிநீக்கம் செய்வதோடு, காலியாகும் பணியிடங்களை ஹெச்1-பி விசாவில் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்தியர்களை பணியமர்த்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ‘அமெரிக்க சம பணி வாய்ப்பு ஆணையத்திடம்’ முறைப்படி புகாரும் அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் பத்துக்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 40 முதல் 60 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்கள் இவ்வாறு டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ’சம பணி வாய்ப்பு ஆணையத்திடம்’ முறையிட்டுள்ளது. வயது மட்டுமன்றி இனத்தின் அடிப்படையிலும் டிசிஎஸ் பாகுபாடு காட்டியதே தங்களது பணியிழப்புக்கு காரணம் என்றும் அந்த அமெரிக்கர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம்

அமெரிக்க ஊழியர்களைவிட கல்வித் தகுதியில் குறைந்த இந்தியர்களை ஹெச்1-பி விசாவில் அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம், குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை பராமரிக்க டிசிஎஸ் முயன்று வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுமார் 6 லட்சம் ஊழியர்களுடன் உலகம் முழுக்க கிளைகளைக் கொண்டிருக்கும் டிசிஎஸ் நிறுவனம், அதன் வணிகத்தில் பாதியளவுக்கு அமெரிக்காவில் ஈட்டி வருகிறது. ஆனால் அங்கே அமெரிக்க ஊழியர்களை புறக்கணித்து, இன அடிப்படையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் தற்போது எழுந்திருக்கும் புகார் அந்த நிறுவனத்தை புதிய இக்கட்டில் நிறுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை அந்த நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதனிடையே அமெரிக்க ஊழியர்களின் புகார்கள் டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிரானதாக மட்டுமன்றி, ஹெச்1-பி விசாக்கள் எவ்வாறு இந்திய ஐடி நிறுவனங்களால் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற விவாதத்தையும் அமெரிக்காவில் எழுப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in