கொலு படி வைக்கலாம் வாங்க... ‘நவராத்திரி கொலு‘வின் மகிமை!

கொலு படி வைக்கலாம் வாங்க... ‘நவராத்திரி கொலு‘வின் மகிமை!

கொலு வைப்பது குறித்து 18 புராணங்களில் ஒன்றான, மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சுரதா என்ற மகாராஜா, தனது பகைவர்களை வெற்றி கொள்வதற்காக குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறார். குருவும் அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்குகிறார். குரு கூறியபடி, தூய்மையான ஆற்று மணலைக் கொண்டு காளி ரூபத்தை செய்கிறார் மகாராஜா சுரதா. அதைக் காளியாக அலங்கரித்து, பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வழிபடுகிறார்.

அம்பிகை அவரது வேண்டுதலை நிறைவேற்றி, அவர் விரும்பியபடி அரக்கர்களையும் பகைவர்களையும் அழித்து, பின்பு ஒரு புதிய யுகத்தையே உருவாக்குகிறாள். மனம் மகிழ்ந்த மகாராஜா சுரதா, அம்பிகைக்கு நன்றி தெரிவிக்க, அம்பிகையும், “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையை வைத்து என்னை பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன்” என்று அருள்பாலித்தாள் என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனைப் பூஜிக்கும் மரபு ஏற்பட்டது.

இப்போது காலத்துக்கேற்ப மரம், பீங்கான், கண்ணாடியிலும் பொம்மைகள் செய்யப்பட்டு கொலுவில் வைக்கப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக அத்திவரதர் பொம்மைகள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளன.

கொலு தத்துவம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன், பொருளாதாரத்தில் மட்டுமின்றி, ஆன்மிகரீதியாகவும் தன்னை உயர்த்திக் கொண்டு இறைவனுடன் கலக்க வேண்டும். இந்த மனிதப் பிறப்பின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கும் பொருட்டே 9 படிகள் வைத்து, அதில் பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம். அவரவர் வசதிக்கேற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.

முதல் படியில் ஓரறிவு உள்ள உயிர்பொருட்களை (புல், செடி, கொடி) உணர்த்தும் பொம்மைகளையும், 2-வது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகளையும், 3-வது படியில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு பொம்மைகளையும் வைக்க வேண்டும்.

4-வது படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள், 5-வது படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்கு பொம்மைகள், 6-வது படியில் ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள், 7-வது படியில் மகரிஷிகளின் பொம்மைகள், 8-வது படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலர்களின் பொம்மைகள், 9-வது படியில் பிரம்மா, சிவன் போன்ற தெய்வ பொம்மைகளை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவாகத் தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே, இவ்வாறு கொலு வைக்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in