ஹிரோஷிமாவை விட 24 மடங்கு வீரியமிக்க அணுகுண்டு வைத்துள்ளோம்... எச்சரிக்கும் அமெரிக்கா!

அணுகுண்டு
அணுகுண்டு

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது அணுகுண்டை வீசி அமெரிக்கா பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டு தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அமெரிக்காவின் துறைமுகத்தை ஜப்பானியர்கள் வெற்றிகரமாக தாக்கியிருந்தார்கள். இந்த உற்சாகம் போரில் மேலும் தீவிரமாக இறங்க ஜப்பானுக்கு உந்து சக்தியாக இருந்தது. அந்த காலை வேளையில் திடீரென பலத்த சத்தம். சுமார் 100 அடி உயரம் வரை நெருப்பு பிழம்பு எரிந்ததைதான் மக்கள் கடைசியாக பார்த்த காட்சி. அதன் பின்னர் அதை பார்த்த மக்கள் யாரும் உயிருடன் இருக்கவில்லை. தப்பி பிழைத்தவர்கள் கூட இந்த 78 ஆண்டுகளில் கொடூரமான கதிர்வீச்சு தாக்கத்தால் உயிரிழந்துவிட்டனர். மொத்தமாக இந்த தாக்குதலில் 1.40 லட்சம் கொல்லப்பட்டனர்.

ஹிரோஷிமா
ஹிரோஷிமா

தங்கள் நாட்டில் என்ன நடந்தது என்பதே ஜப்பானுக்கு 16 மணி நேரம் கழித்துதான் தெரிய வந்தது. லிட்டில் பாய் அணுகுண்டின் தாக்கம்தான் இது எல்லாம். 78 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட இந்த வடுவுடன்தான் மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், இந்த லிட்டில் பாய் அணுகுண்டை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டு தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க பாதகாப்புத் துறையின் பெண்டகன் இதனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளிக் கொள்கைக்கான பாதுகாப்பு செயலாளர் ஜான் பிளம்ப்-ம் இதை உறுதி செய்திருக்கிறார். இந்த அணு குண்டுக்கு B61-13 என பெயரிடப்பட்டுள்ளது. இது வெடித்தால் நாகாசாகியில் போடப்பட்ட அணுகுண்டை விட 14 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பென்டகன் கூறியுள்ளது. நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த குண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தரையில் விழுந்த பின்னர் வெடிப்பதற்கு பதிலாக, தரையை தொடுவதற்கு முன்னரே அது வெடித்துவிடும். இது வெடித்தால் குறைந்தபட்சம் 3.5 கி.மீ பரப்பில் எல்லாம் உரு தெரியாமல் அழிந்துவிடும்.

சமீபத்தில் சீனா தனது அணு ஆயுதங்களை 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்துதான் தற்போது அமெரிக்கா தரப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவுக்கு சீனா பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்து வருகிறது. ரஷ்யாவும் சீனாவுடன் கைகோர்த்திருக்கிறது. எனவே உலக அரங்கில் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்க அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in