பாகிஸ்தான் முதல் கனடா வரை... இந்தியாவின் ‘ரா’ உளவாளிகள் ரௌத்திரம் கொள்வதன் பின்னணி!

ரா உளவாளி
ரா உளவாளி

ஜேம்ஸ்பாண்ட் படங்களையும் அதில் விரியும் பிரிட்டன் உளவாளியின் சாகசங்களையும் ரசிக்காதவர்கள் குறைவு. ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாத சாகசங்களை, இந்தியாவின் ஜேம்ஸ்பாண்டுகள் அந்நிய மண்ணில் நிகழ்த்தி வருவது தற்போது பகிரங்கமாகி வருகிறது.

அந்நிய மண்ணில் வேரூன்றிய ‘ரா’

“எதிரிகளையும் துரோகிகளையும் அழிக்க நாங்கள் அண்டை நாடுகளுக்கு கமாண்டோக்களை அனுப்புவதில்லை. எங்களுக்காக வேலை செய்பவர்கள் ஏற்கெனவே அங்கே வேரூன்றி இருக்கிறார்கள்” - பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்து ஒசாமா பின்லேடனை அமெரிக்க கமாண்டோக்கள் வதம் செய்தபோது, பேட்டி ஒன்றில் இந்தியாவின் முன்னாள் ’ரா’ அதிகாரி ஒருவர் பெருமையோடு இப்படிச் சொன்னார். அப்போது சர்வதேச ஊடகங்கள் நகைப்புடன் அந்தக் கூற்றை புறக்கணித்தன.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொடர்ந்தே, அதற்கு முன்னதாக பல்வேறு நாடுகளில் ‘ரா’ உளவாளிகள் அரங்கேற்றிய அதிரடிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் ரா முன்னாள் அதிகாரி மேற்கண்டவாறு அப்போது தெரிவித்ததை, சர்வதேச ஊடகங்கள் தற்போது வியப்புடன் விவாதித்து வருகின்றன. இஸ்ரேலின் ’மொஸாட்’ அசகாய உளவாளிகளுக்கு நிகராக இந்தியாவின் ’ரா’ உளவாளிகள் சாகசம் புரிந்துவருவதையும் அந்த விவாதத்தில் வியந்து வருகிறார்கள்.

கனடாவில் கசியவிட்ட ‘ரா’

காலிஸ்தான் புலிப் படை என்ற தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ஜூன் 19 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குருத்வாரா ஒன்றின் வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கனடா - இந்தியா இடையிலான மோதலாக வளர்ந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா மண்ணில் புகுந்து தங்கள் குடிமகனை கொன்றது இந்தியாவின் உளவாளிகள் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குமுறினார். தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு உறுதி தெறிக்க பேசினார். ஆனால், அந்த ஆதாரங்கள் எல்லாம் இந்தியாவின் ஏஜெண்டுகள் திட்டமிட்டு கசியவிட்டது என்பதும், அதற்கு அப்பாலான துப்பு எதையும் கனடா விசாரணை அமைப்புகளால் கண்டறிய முடியவில்லை என்பதையும் ஜஸ்டின் புரிந்துகொண்ட போது அமைதியானார்.

நிஜ்ஜார் படுகொலையில் ‘ரா’ ஏஜென்டுகள் ஏன் தங்கள் பின்னணியை கசிய விட வேண்டும் என்பதில்தான் சூட்சுமம் மறைந்திருக்கிறது. இந்தியாவின் எதிரிகள், துரோகிகள், பிரிவினைவாதிகள் எவராக இருப்பினும், அவர்கள் உலகின் எந்த மூலையில் பதுங்கியிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படினும், கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள் என்ற செய்தியை ’சூசக - பகிரங்கமாக’ ‘ரா’ தெரிவித்திருக்கிறது. அங்கே நூல் பிடித்து பின்னோக்கி சென்றபோதுதான் ‘ரா’ உளவாளிகளின் முந்தைய அழித்தொழிப்புகள் ஒருசில வெளியுலகுக்குத் தெரிய வந்தன.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜீத் சிங் நிஜ்ஜார்
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜீத் சிங் நிஜ்ஜார்

பாகிஸ்தான் முதல் அமெரிக்கா வரை

நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக ஜூன் 16 அன்று, இங்கிலாந்தின் பர்மிங்காம் மருத்துவமனை ஒன்றில் அவதார் சிங் கந்தா என்பவர் வீரிய விஷம் பாதித்த நிலையில் மரணமடைந்து கிடந்தார். காலிஸ்தான் விடுதலைப் படையின் தளபதிகளில் ஒருவரான இந்த கந்தாவின் பெயரை, இந்தியாவின் என்ஐஏ கோப்புகள் ’வெடிகுண்டு நிபுணர்’ என்பதாக பதிவு செய்து வைத்திருக்கின்றன.

வெளியுலகுக்கு சீக்கியர்களின் உரிமைப் போராளியாக அடையாளம் காணப்பட்ட கந்தா, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசக் கொடியை அகற்றி காலிஸ்தானின் மஞ்சள் கொடியை நிறுத்த முயன்ற சம்பவத்தில் முதன்மைக் குற்றவாளி ஆவார். இந்த கந்தா கொல்லப்பட்டதற்கு சற்று முன்னதாக மே 6 அன்று காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவரான பரம்ஜித் சிங் பஞ்வார் என்பவரை, பாகிஸ்தானில் அவரது இருப்பிடத்தில் வைத்தே ’சிலர்’ சுட்டுக்கொன்றனர்.

ரா தாக்குதல்
ரா தாக்குதல்

அது மட்டுமல்ல அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ’சாலை விபத்து’ ஒன்றில் குர்பத்வந்த் சிங் பன்னு என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவர் படுகாயமடைந்தார். அதில் உயிர் தப்பிய அவர் தற்போது கனடாவில் பதுங்கி இருந்தபடி, இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நாசகாரம் விளைவிப்போம் என்று கொக்கரித்திருக்கிறார். உண்மையில் ‘ரா’ உளவாளிகளிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் சதா ஓடிக்கொண்டே இருக்கிறார்.

இவை மட்டுமல்ல; 1985, ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கவாதியான ரிபுதாமன் சிங் மாலிக் என்பவர் இங்கிலாந்தின் சர்ரேயில் கடந்த வருடம் மர்ம முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப்பின் மொஹாலி போலீஸ் தலைமையகத்தில் 2021-ல் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹர்விந்தர் சிங் சந்து, பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில் மிகையான போதைப்பொருட்களை ’உட்கொண்ட’ நிலையில் இறந்து கிடந்தார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டரான பஷீர் அகமது பீர் என்பவர் இந்த வருடம் பிப்ரவரி 20 அன்று பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ’மர்ம நபர்களால்’ சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான அல் பத்ரின் என்ற தீவிரவாத அமைப்பின் தளபதி சையத் காலித் ராசா பிப்ரவரி 27 அன்று சகல பாதுகாப்பும் கூடிய அவரது இல்லத்தில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார்.

‘ரா’ ரௌத்திரம் கொண்டது ஏன்?

சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகளுடன் அடுத்தடுத்து போர்கள் எழுந்த பிறகே, அமெரிக்காவின் சிஐஏ பாணியில் வெளிநாடுகளை வேவுபார்க்க இந்தியாவுக்கும் ஒரு உளவு அமைப்பு தேவை என இந்தியா உணர்ந்தது. அப்படி உதயமானதுதான் ’ரா’ உளவு நிறுவனம். RAW என்பதை தமிழில் விரித்தால் ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு’ என்ற பாந்தமான பெயர் வரும். ஆனால் ‘ரா’ புரியும் சாகசங்கள் எல்லாம் ரகளை ரகம்.

ரா
ரா

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு எதிராக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும், பாகிஸ்தானில் ‘ரா’ நிகழ்த்துவதாக அந்நாடு புலம்பி வந்தது. பாகிஸ்தானின் அரசியல் குழப்பங்கள் முதல் அதிகார மோதல்கள் வரை ‘ரா’ கைங்கரியம் இருப்பதாகவும் அந்த புலம்பல் நீளும்.

குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான அரசியல்வாதிகள் முதல் தீவிரவாதிகள் வரை தொடர்ந்து களையெடுக்கப்படுவதின் பின்னணியிலும், அந்த பிராந்தியத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று அங்கிருந்து உரிமைக் குரல்கள் கிளம்பியதிலும் ‘ரா’ பின்னணி உண்டு. ஆனால், பாகிஸ்தானுக்கு அப்பாலும் ‘ரா’ உளவாளிகள் தீரமான நடவடிக்கைகள் ஈடுபட்டிருப்பது தாமதமாகவே வெளியுலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

‘ரா’ இனி பகிரங்கம்

முன்னாள் ‘ரா’ உளவு அதிகாரியான ஆர்.கே.யாதவ் என்பவர் எழுதிய ’மிஷன் ரா’ என்ற நூலை, சர்வதேச ஊடகங்களின் புலனாய்வு புலிகள் தற்போது விழுந்தடித்து வாசித்து வருகின்றனர். ‘ரா’ குறித்து கற்பனையாகவும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராவும் அந்த நூலில் இருப்பதாக முன்பு அலட்சியம் காட்டியவர்கள், தற்போது அத்தனையும் உண்மை என்கிறார்கள்.

ரா
ரா

இதர நாடுகளைப் போலவே இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரக அதிகாரிகளின் பெயரில் மட்டுமே இந்திய உளவாளிகள் கலந்திருப்பதில்லை. வீரஞ்செறிந்த இஸ்ரேலின் மொஸாட் உளவாளிகளுக்கு நிகராக ‘ரா’ உளவாளிகள் தங்களது உயிர் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பணயம் வைத்து அந்நிய மண்ணில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். உளவு பார்த்தலுக்கு அப்பால் அவசியம் நேரும்போது வேட்டையாடலுக்கும் அவர்கள் அனுப்பப்படுவார்கள். எல்லை காக்கும் ராணுவ வீரர்களை விட அபாயகரமான அவர்களது பணிக்கு பொதுவெளியில் அங்கீகாரமும் கிடைக்கப் போவதில்லை. ஆனபோதும் தாய் நாட்டுக்காக அந்நிய மண்ணில் தீரத்துடன் களமாடி வருகிறார்கள்.

இந்த இந்திய உளவாளிகள் பாகிஸ்தான் முதல் கனடா வரை புகுந்து வதம் செய்து வருவதன் நோக்கத்தை உலக நாடுகள் உணர்ந்தே இருக்கின்றன. அஹிம்சை, அணி சேராமை, அமைதிப் புறா என இந்தியாவின் பழைய அடையாளங்களில் இப்போது வரை பழுதில்லை. அதேசமயம், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான எந்தவொரு நகர்வையும், இந்தியா பொறுத்துக்கொள்ளாது; போர்முனைத் தாக்குதலுக்கு நிகராக பதிலடி தரும் என்பதையே தற்போதைய ‘ரா’ எடுத்திருக்கும் ரௌத்திரம் நிரூபித்து வருகிறது!

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in