‘ஹமாஸ் உடன் கைகோர்க்க நாங்கள் தயார்’ ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அறிவிப்பு!

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள்
ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள்

ஹமாஸ் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட முழுமையான தயார் நிலையில் உள்ளதாக, லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனியன்று ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போராளிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் படைகள் காசா மீது தாக்குதல் தொடுத்ததில் குறைந்தது 1,900 பேர் அங்கு இறந்திருப்பதாக பாலஸ்தீனம் தெரிவிக்கிறது. பலியானவர்களில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

ஹிஸ்புல்லா துணைத்தலைவர் ஷேக் நைம் காசிம்
ஹிஸ்புல்லா துணைத்தலைவர் ஷேக் நைம் காசிம்

இஸ்ரேலுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அவ்வப்போது இஸ்ரேல் நிலைகள் மீது தாக்குதல் தொடுப்பது வழக்கம். காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டிக்கும் வகையில், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது பீரங்கி தாக்குதல் நடத்தின. பதிலுக்கு இஸ்ரேல் வான்படைகள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது குண்டு வீசின.

இந்த சூழலில் காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்க தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான கூட்டம் ஒன்றில் பேசிய காசிம், “இந்த போரில் ஹிஸ்புல்லாக்கள் தங்களது கடமையை ஆற்றுவார்கள்” என்றார்.

ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பெய்ரூட்டுக்கு விஜயம் செய்யும் தருணத்தில், காசிம் இந்த கருத்தினை பதிவு செய்திருப்பது கவனம் பெறுகிறது. ஹமாஸ் அமைப்பைவிட அதிகமாக ஹிஸ்புல்லாவின் பின்னிருந்து இரான் ஆதரித்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்ரேல் - காசா போரிலிருந்து ஹிஸ்புல்லா விலகி இருக்க வேண்டும் என மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஐநா சபை கோரி இருப்பதை காசிம் புறக்கணித்தார்.

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா

"உலகின் பிரதான நாடுகள், அரபு தேசங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்கள் உள்ளிட்டோர், நேரடியாகவும் மறைமுகமாகவும் எங்களை, இஸ்ரேல் - ஹமாஸ் போரில் தலையிட வேண்டாம் என்கிறார்கள். இந்த கோரிக்கைகள் ஹிஸ்புல்லா அமைப்பை எந்த வகையிலும் பாதிக்காது. ஹிஸ்புல்லா அமைப்பு அதன் கடமைகளை அறிந்திருக்கிறது” என்று காசிம் பேசினார்.

காசாவை குறிவைத்து அழித்துவரும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபடுவது, இஸ்ரேலுக்கு ஆதரவு - எதிர்ப்பு என பல்வேறு நாடுகளையும் போரில் பங்கேற்கச் செய்யும். இதன் மூலம் இஸ்ரேல் - காசா என அண்டை நாடுகள் இடையே முடிந்திருக்க வேண்டிய சிறு பிராந்திய போர் தற்போது விஸ்வரூபமெடுக்க இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in