சிறையில் இம்ரான்கான்... பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைக்க, அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து, அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும். கலைக்கப்பட்ட இடைக்கால ஆட்சியின் ஆயுட் காலம் வரும் நவம்பர் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற எல்லை மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்கால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

இதனிடையே, தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி காஜி ஃபயஸ் இசா, நீதிபதிகள் அதார் மினால்லா, நீதிபதி அமின் உத்தின் கான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணைக்கு வந்தது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

அந்நாட்டு தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜனவரி இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என கூறியிருந்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட தேதியை அறிவிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் பிப்ரவரி 11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இம்ரான் கான் - நவாஸ் ஷெரீப்
இம்ரான் கான் - நவாஸ் ஷெரீப்

ஊழல் வழக்கில், இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் இருந்து வருகிறார். இதனிடையே, மேல் சிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப், தாயகம் திரும்பி இருக்கிறார். தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான் விரைவில் ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் தேர்தல் அந்நாட்டில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in