உக்ரைனுக்கு உதவுமா அமெரிக்காவின் ‘தற்கொலை டிரோன்கள்?’

உக்ரைனுக்கு உதவுமா அமெரிக்காவின் ‘தற்கொலை டிரோன்கள்?’

‘வெற்றிட குண்டு’ முதல் கின்ஜல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை ஏராளமான ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைனை உருக்குலைத்துக்கொண்டிருக்கிறது ரஷ்யா. 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகியிருக்கிறார்கள். புக்கா நகரில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய படுகொலைகள், அட்டூழியங்கள் உலகை அதிரவைத்திருக்கின்றன. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தன்னளவில் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறது. தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் அதிகம் என ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரீ பெஸ்கோவ் ஒப்புக்கொள்ள்ளும் அளவுக்கு ரஷ்யப் படைகள் கடும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

இந்தச் சூழலில், உக்ரைனுக்குத் தற்கொலை டிரோன்களை அனுப்பியிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. ராணுவ டாங்குகளையும், ஆயுதம் தாங்கிய வாகனங்களையும் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிரோன்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ரஷ்ய ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜப்பானியப் பெயர்

‘ஸ்விட்ச்பிளேடு’(Switchblade) டிரோன்கள் என்று அழைக்கப்படும் இந்த டிரோன்களுக்கு காமிகஸே (Kamikaze) எனும் பெயரும் உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் பயன்படுத்திய குறிப்பிட்ட வகை போர் விமானங்களுக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த வகைப் போர் விமானங்களிலிருந்து எதிரிகளின் கப்பல்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்துவதெல்லாம் கிடையாது. நேரடியாகக் கீழிறங்கி கப்பல் மீது விமானத்தை மோதச் செய்வார்கள் ஜப்பானிய விமானிகள். ஆம், தற்கொலைத் தாக்குதலுக்குத்தான் காமிகஸே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே பெயரைத்தான் இந்த டிரோன்களுக்கும் வைத்திருக்கிறது. ஒருமுறை மட்டுமே இந்த டிரோன்களைப் பயன்படுத்த முடியும். இலக்குகள் மீது மோதி வெடிக்கச் செய்வதுடன் இந்த டிரோன்களும் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. செலுத்தப்படும் இடத்திலிருந்து 25 மைல்கள் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள இலக்கு மீது மோதி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை இந்த டிரோன்கள். இவற்றை வைத்து ட்ரக்குகள், டாங்குகள், ஆயுதம் தாங்கிய வாகனங்களை அழித்துவிட முடியும்.இதில் கேமராக்கள், வழித்தட சாதனங்களுடன் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த வகை டிரோன்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவுசெய்திருப்பதாகக் இரு வாரங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகின. தற்போது இந்த வகையைச் சேர்ந்த 100 டிரோன்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்விட்ச்பிளேடு 300, ஸ்விட்ச்பிளேடு 600 என இதில் இரண்டு வகை உண்டு. இதில் இரண்டாவது வகை அளவில் சற்றே பெரியது. ஸ்விட்ச்பிளேடு 300 வகை டிரோன்கள் 2.7 கிலோ எடை கொண்டவை.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஸ்விட்ச்பிளேடு 300 வகை டிரோன்களின் விலைதான் சற்றே அதிகம். ஆம், ஒரு டிரோனின் விலை 6,000 டாலர்கள். நம்மூர் மதிப்பில் சுமார் 4.50 லட்சம் ரூபாய்!

அதேசமயம், இந்த வகை டிரோன்கள் தங்களுக்குப் பெரிய அளவில் உதவுமா எனும் சந்தேகம் உக்ரைனியர்களுக்கும் இருக்கிறது. தரையில் இருக்கும் இலக்குகளைத்தான் இந்த டிரோன்கள் தாக்கி அழிக்கும். விமானங்களையும் ஏவுகணைகளையும் இவற்றால் அழிக்க முடியாது என்பதை உக்ரைன் விமானப் படை சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவோ, நேட்டோ அமைப்பின் பிற நாடுகளோ இதுவரை உக்ரைனுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிவிடவில்லை. கூடவே, ஜெட் வகை போர் விமானங்கள் உள்ளிட்ட வான்வழி சாதனங்கள் வேண்டும் எனும் கோரிக்கையை அந்நாடுகள் இதுவரை பொருட்படுத்தவில்லை எனும் வருத்தம் உக்ரைனுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in