40 மைல் நீளத்துக்கு அணிவகுத்த ரஷ்ய ராணுவம்: உக்ரைனில் கூடுதல் பதற்றம்!

40 மைல் நீளத்துக்கு அணிவகுத்த ரஷ்ய ராணுவம்: உக்ரைனில் கூடுதல் பதற்றம்!

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, தனது ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் 40 மைல் நீளத்துக்கு ராணுவ டாங்குகள் அடங்கிய அணிவகுப்பை நடத்தியிருக்கிறது.

பலம்பொருந்திய ரஷ்ய ராணுவத்தை எதிர்கொண்டு உக்ரைனியர்கள் தீரத்துடன் போராடிவருகின்றனர். அந்நாட்டின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் எனப் பல நகரங்கள் மீது ஷெல் குண்டுகள், பீரங்கித் தாக்குதல் என தாக்குதல் நடத்திவரும் நிலையிலும், ரஷ்ய ராணுவத்தால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என எதையும் அடைய முடியவில்லை என்கின்றன சர்வதேச ஊடகங்கள். அதேவேளையில் உக்ரைனில் தனது படைகளின் எண்ணிக்கையை ரஷ்யா அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுபுறம், உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி உதவிவருகின்றன. எனினும் இந்தப் போரைத் தனித்துத்தான் எதிர்கொள்கிறது உக்ரைன். ஸெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசைக் கவிழ்க்கும் முனைப்பில் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதாகக் கருதப்படுகிறது.


இந்நிலையில், 40 மைல் நீளத்துக்கு ராணுவ டாங்குகள் அடங்கிய அணிவகுப்பை உக்ரைன் தலைநகர் கீவின் வடக்குப் பகுதியில் ரஷ்யா நடத்தியிருக்கிறது. இந்தக் காட்சி அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் டெக்னாலஜி எனும் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படமாக வெளியாகியிருக்கிறது.
இந்தத் தகவலை வெளியிட்டிருக்கும் மக்ஸார் நிறுவனம், கூடுதலாகத் தரைப்படை ராணுவத்தையும், ஹெலிகாப்டர் அணியையும் பெலாரஸின் தெற்குப் பகுதியில் ரஷ்யா குவித்திருப்பதாகக் கூறியிருக்கிறது. உக்ரைன் எல்லையிலிருந்து 20 மைல் தொலைவில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

உக்ரைனுக்குக் கூடுதலாக ஆயுதங்கள் வழங்க்கப்படும் என்றும், ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைட்ரோ குலேபா கூறியிருக்கிறார்.

ஜெனிவா ஒப்பந்தத்தின்படி தடைசெய்யப்பட்ட வெற்றிட வெடிகுண்டை (vacuum bomb) ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா கூறியிருக்கிறார். இந்த வகை வெடிகுண்டு, சுற்றுப்புறத்தில் உள்ள காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பயன்படுத்தி அதிக வெப்ப உமிழ்வுடன் வெடிக்கக்கூடியது. வழக்கமான வெடிகுண்டுகளைவிடவும் நீண்ட நேரத்துக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியது.


இந்தச் சூழலில் ரஷ்ய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கவும் ஏவுகணைகள் செலுத்தப்படவும் தடை விதிக்கும் வகையில் ‘நோ-ஃப்ளை ஸோன்’ உக்ரைனில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in