45 அடி நீளத்துக்குச் சவக்குழி: நடுங்கவைக்கும் செயற்கைக்கோள் காட்சி!

உக்ரைன் போரில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய படுகொலைக்கு அத்தாட்சி
 45 அடி நீளத்துக்குச் சவக்குழி: நடுங்கவைக்கும் செயற்கைக்கோள் காட்சி!

உக்ரைனில் தொடர்ந்து 40-வது நாளாகத் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவின் வடகிழக்கு திசையில் 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புக்கா நகரின் தேவாலயம் அருகே 45 அடி நீளத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் டெக்னாலஜி எனும் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் இந்தக் காட்சி பதிவாகியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை (ஏப்.2) புக்கா நகருக்குச் சென்றிருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள், அந்த இடத்தை நேரில் சென்று பார்த்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். அதில் ஒரு சவக்குழி திறந்த நிலையில் கிடப்பதாகவும், செந்நிற களிமண் நிலத்தில் தோண்டப்பட்ட அந்தச் சவக்குழியிலிருந்து சடலங்களின் கை, கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதற்கிடையே, ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருந்த புக்கா நகரை உக்ரைன் படையினர் மீட்டுவிட்டனர். இதையடுத்து, அந்நகரில் ரஷ்யப் படைகள் படுகொலைகளை நிகழ்த்தியது தெரியவந்திருப்பதாக உக்ரைன் கூறியிருக்கிறது. புக்கா நகரில் மட்டுமல்லாமல், இர்பின், ஹோஸ்டோமெல் நகரங்களிலும் இதுபோல் பெரிய அளவில் சவக்குழிகள் கண்டறியப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ரஷ்யா இதை மறுத்திருக்கிறது.

இதற்கிடையே, ரஷ்யாவின் செயலுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, இதுதொடர்பாக நேற்று ஆற்றிய உரையில், “ரஷ்ய ராணுவத்தினர் கொலைகாரர்கள், சித்திரவதை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், கசாப்புக்கடைக்காரர்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தாக்குதல்களுக்கு நடுவே, உக்ரைன் பெண்களையும் சிறுமிகளையும் ரஷ்யப் படையினர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in