பாதுகாப்பை கோட்டைவிட்ட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
பாதுகாப்பை கோட்டைவிட்ட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

பிரதமரின் காரை வழிமறித்த பெண்! பாதுகாப்பை கோட்டைவிட்ட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் காரை பெண் ஒருவர் வழிமறித்த விவகாரத்தில் 3 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் அடையாளமாக கருதப்படும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள், பிர்சா முண்டா ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 14ம்தேதி இரவு ராஞ்சி வந்து சேர்ந்த பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் வரை சுமார் 10 கிமீ தூரம் சாலைப் பேரணி நடத்தினார். நேற்று காலை அங்கிருந்து பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் மியூசியத்திற்கு சென்று, பிர்சா முண்டாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் குந்தி மாவட்டத்தில் உள்ள பிர்சா முண்டாவின் பிறந்த ஊரான உலிஹாட்டு கிராமத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் மியூசியத்திற்கு பிரதமர் சென்றபோது, ஒரு பெண் திடீரென ஓடி வந்து பிரதமரின் பாதுகாப்பு வாகனத்திற்கு முன்நின்று வழிமறித்தார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்து, உடனடியாக அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காவலில் வைத்தனர். இச்சம்பவம் பற்றிய விசாரணையில், இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 2 போலீஸ்காரர்களின் கவனக் குறைவு தான் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிரதமரின் காரை மறித்த பெண்ணிடம் காவல்துறையினர் நடத்தி விசாரணையில், அவரது பெயர் சங்கீதா ஜா என்பது தெரியவந்தது. கடந்த அக்டோபரில் டெல்லி சென்ற அந்தப்பெண் பிரதமரைச் சந்திக்க சென்றுள்ளார். 10 நாட்கள் தங்கியிருந்த அவர், பிரதமரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார். இதனிடையே, ஜார்கண்ட் மாநிலத்திற்கு பிரதமர் வருவதாக அறிந்து இங்கு வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in