மாவோயிஸ்ட் ஊடுருவல்... உளவுத்துறை எச்சரிக்கை! தமிழக எல்லையை கண்காணிக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார்!

மாவோயிஸ்ட் ஊடுருவல்... உளவுத்துறை எச்சரிக்கை!  தமிழக எல்லையை கண்காணிக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார்!

மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தமிழக - கேரள எல்லையில் போலீஸார் தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது. அங்கு மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தைத் தடுக்க, தண்டர்போல்டு எனப்படும் சிறப்புப்படை போலீஸார் வனப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டர்போல்டு சிறப்புப் படை போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டைகளும் நடைபெறுவது உண்டு.

இந்நிலையில், கடந்த வாரம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்டு சிறப்புப்படை போலீஸாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் அங்கு ஒரு இடத்தில் பதுங்கி இருந்த 2 மாவோயிஸ்டுகளை போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர், சில நாட்கள் கழித்து கண்ணூர் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், கேரள மாநில போலீஸாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் தப்பி ஓடினர். அவர்கள் தங்கியிருந்த இடத்தை சிறப்புப் படை போலீஸார் கண்டறிந்து ஆய்வு செய்தனர். அங்கு இருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு ரத்தம் சிந்தியதற்கான அடையாளங்கள் இருந்தன.

எனவே, போலீஸார் சுட்டதில் மாவோயிஸ்டுகளுக்கு காயம் ஏற்பட்டதும், அவர்கள் காயத்துடன் தப்பிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. அடிபட்ட மாவோயிஸ்டுகள் சிகிச்சைக்காக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாநிலங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி, கோவை போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டனர். தமிழக-கேரள மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,‘‘ மாவட்ட சோதனைச் சாவடிகளில் 160 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 90 போலீஸார் துப்பாக்கிகளுடன் கண்காணிப்பில் உள்ளனர். கேரளாவில் இருந்து காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்ட்கள் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்குள் வரும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. மாவட்ட எல்லைகளில் உள்ள மருந்துக்கடைகள், மருத்துவமனைகளில் கடுமையான காயங்களுக்கு மருந்து, மாத்திரைகள் யாராவது வாங்கினால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in