பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி... சென்னையில் பரபரப்பு!

ரவுடி பாம்பே சத்தியா
ரவுடி பாம்பே சத்தியா

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியைக் காட்டி கொடுத்ததால் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
பாஜக பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை மாதவரம் டிரக் டெர்மினல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41). இவர் பாஜகவில் மாநில பிரச்சாரக்குழு செயலாளராக உள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் அதே பகுதியில் சொந்தமான அலுவலகம் வைத்துள்ளார்.. இவரது அலுவலகத்தில் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அக்கவுண்டன்டாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜேஷ் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு கத்தியுடன் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், பாலகிருஷ்ணனை எங்கே என்று கேட்டு மிரட்டியது.

அப்போது அங்கு பாலகிருஷ்ணன் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அலுவலகத்தில் இருந்த டிவி, டேபிள், நாற்காலி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றது. அப்போது உயிருக்கு பயந்து ராஜேஷ் வெளியே ஓடிவந்து மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரவுடி கும்பல் தாக்குதல்
ரவுடி கும்பல் தாக்குதல்

அப்போது ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி பாம்பே சத்தியா தனது அடியாட்களுடன் சென்று பாலகிருஷ்ணன் அலுவலகத்தை சூறையாடியது தெரியவந்தது.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் பக்கீரிபாய் என்பவரை கடத்தி பணம் பறித்த வழக்கில் ரவுடி பாம்பே சத்தியா மற்றும் தற்போதைய பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறைக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பாலகிருஷ்ணன் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்நிலையில் ரவுடி பாம்பே சத்தியா தலைமறைவானதால் பாலகிருஷ்ணன் அவரது இருப்பிடத்தை போலீஸாருக்குக் காட்டிக் கொடுத்தார். இதனால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பாம்பே சத்தியா தன்னைக் காட்டி கொடுத்த பாலகிருஷ்ணனை போட்டுத் தள்ளத் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ரவுடி பாம்பே சத்தியா தனது கூட்டாளிகளான செங்கற்பட்டைச் சேர்ந்த மாரி, விக்கி, ஜோனா ஆகியோருடன் பாலகிருஷ்ணன் அலுவலகத்திற்கு சென்று சூறையாடியது தெரியவந்தது.

மேலும் இதே கும்பல் இங்கு வருவதற்கு முன்பு கொத்தவால் சாவடியில் பிரியாணி கடையில் தகராறில் ஈடுப்பட்டதும் பின்னர் அங்கிருந்த ஓட்டல் ஊழியரை கத்தியதால் வெட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தப்பி ஓடிய ரவுடி கும்பலைத் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in