பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

பங்காரு அடிகளாருடன் மு.க.ஸ்டாலின்
பங்காரு அடிகளாருடன் மு.க.ஸ்டாலின்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பங்காரு அடிகளார் மறைவையொட்டி முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், " ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச் சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக திமுக பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது.

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'நம்மைக் காக்கும் 48' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in