வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

மாநிலங்களவை
மாநிலங்களவை

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள  வேட்பாளர்கள் 14 பேரின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில் அதில் தங்களின் பெயர்கள் இல்லாததால் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டில் 15 மாநிலங்களில் உள்ள 56 உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதம் காலியாவதை முன்னிட்டு அதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய  15-ம் தேதி கடைசிநாளாகும்.

இந்நிலையில் இதில் போட்டியிடக்கூடிய 14 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக  வெளியிட்டுள்ளது. இதில் கர்நாடகத்தில் இருந்து தேர்வான மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், உத்தராகண்டில் இருந்து தேர்வான பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி ஆகியோரின் எம்.பி. பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுஷீல் குமார் மோடியின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதனால் அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் மக்களவைத் தேர்தலில்  களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வேட்பாளர் பட்டியலில் உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதிக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பேருமே  புதுமுகங்கள் தான். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆா்.பி.என்.சிங்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபாலா, தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோரின் பதவிக் காலமும் நிறைவடைகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்தில் அடங்கிய இந்த இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அதில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதேபோல பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலமும் நிறைவடையவுள்ளது. இவர் ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்து தேர்வானவர். இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இம்மாநிலத்தில் பாஜகவிடம் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லை. எனவே, ஜெ.பி.நட்டா வேறொரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

பீகாரில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியாகும் நிலையில், எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு 3 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைக்கும். இதில் பாஜக சார்பில் தர்மசீலா குப்தா, பீம் சிங் ஆகிய இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு  ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த  இடத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளரை அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in