அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை... செந்தில் பாலாஜி வழக்கில் 15-ம் தேதி தீர்ப்பு!

கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி
கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி

தன்மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை, வருகிற பிப்ரவரி 15-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதி, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை பதிவுசெய்துள்ள வழக்கின் விசாரணையை நிறுத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, தகுதியான எந்தக் காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளிவைக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜரானர். அப்போது அவர், “மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும்” என்றார்.

மேலும், வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை எனவும், மேலும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபாகரன் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறையின் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், “இந்த மனு தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு தீர்ப்புகளுக்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை. எனவே, விசாரணையை தள்ளி வைக்கக் கோரும் செந்தில் பாலாஜியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in