வெள்ளியங்கிரி மலையேறிய போது உயிரிழந்த சுப்பாராவ், தியாகராஜன்
வெள்ளியங்கிரி மலையேறிய போது உயிரிழந்த சுப்பாராவ், தியாகராஜன்

ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு... வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்

வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்த மூன்று பேர் அடுத்தடுத்து ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று வெள்ளியங்கிரி. கோவை மாநகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தலம், தென்கயிலை என்று போற்றப்படுகிறது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோயிலில் இருந்து சுமார் 3,500 அடி உயரம் உடைய 7 மலைகளைத் தாண்டி சென்றால், உச்சியில் சுயம்பு சிவன் கோயில் உள்ளது. இரவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்றாலும், பங்குனி மாதத்தில் இந்த மலைக்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றனர்.

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்

இந்த மலைகளை ஏறுவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உடல் நலக் கோளாறுகள் மற்றும் மலைகளுக்கு மேலே நிலவும் கடுமையான குளிர் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

வெள்ளியங்கிரி மலைக்கோயில்
வெள்ளியங்கிரி மலைக்கோயில்

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68) என்பவர் 4வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதே போல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவரும் முதலாவது மலையிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். சுமை தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (40) என்பவர் நண்பர்களுடன் மலையேறிக் கொண்டிருந்தபோது, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலையும் அடிவாரத்துக்கு கொண்டு வந்த வனத்துறையினர், பின்னர் போலீஸார் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மலை ஏறும் போது உயிரிழந்த பாண்டியன்
மலை ஏறும் போது உயிரிழந்த பாண்டியன்

இந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதயக் கோளாறு உள்ளவர்கள், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்கள் உள்ளிட்டோர் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினரும் போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in