‘என்னை ஆட்கொண்ட ஆசிரியர்...’ நாகேஷ் நினைவுநாளில் கமல்ஹாசன் புகழாரம்!

நாகேஷ், கமல்ஹாசன்
நாகேஷ், கமல்ஹாசன்

”நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித்திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன் ” என்று நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காலத்தால் அழியாத இந்த மகத்தான கலைஞனின் நினைவுகளை சற்று திரும்பிப் பார்ப்போம்: தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன் ராவ். தாராபுரம் அருகே கொழிஞ்சிவாடி என்ற சிற்றூரில் கிருஷ்ணன் ராவ் - ருக்மணி அம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் உள்ள அரிசிக்கரே என்ற ஊரின் ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.

தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் படிக்கத் துவங்கினார். இரண்டாம் ஆண்டு படிக்க துவங்கியபோது அம்மை நோயால் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டு இருக்கிறது. கோவையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையை போலவே ரயில்வேயில் பணிபுரிய துவங்கியுள்ளார். திரையுலகில் நுழையும் வரை திருப்பூர் ரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்திருக்கிறார். சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.

1959ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்த நாகேஷ், ’தாமரைக்குளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பைத் துவங்கினார். அதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கே.பாலச்சந்தரின் ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இதன்பின் ’நீர்க்குமிழி’, ’காதலிக்க நேரமில்லை’, ’எதிர்நீச்சல்’ என ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையை பதித்திருப்பார் நாகேஷ். ’திருவிளையாடல்’ தருமி, ’தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி, மாடி வீட்டு மாது என கதாபாத்திரங்களால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், மாதவன் என நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

1952ல் ரெஜினா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகேஷுக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என மூன்று மகன்கள். திரையுலகினரால் வெகுவாகப் போற்றப்பட்ட சிறந்த கலைஞன் நாகேஷ் 2009ஆம் ஆண்டு தன்னுடைய 75வது வயதில் காலமானார்.

இதையும் வாசிக்கலாமே...


தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?

ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!

முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

வீடு புகுந்து மனைவி, காதலன் வெட்டிக் கொலை: முன்னாள் கணவர் வெறிச்செயல்!

பரபரப்பு...வாகனம் ஏற்றி விவசாய சங்க தலைவர் கொலை?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in