நடிகர் ராமராஜனைப் பார்த்து பயந்த ரஜினிகாந்த்...இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரஸ்யம்!

இயக்குநர் ரவிக்குமார்
இயக்குநர் ரவிக்குமார்

தமிழ் திரையுலகில் எண்பதுகளில் வசூல் நாயகனாக இருந்தவர் நடிகர் ராமராஜன். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ என இவர் நடித்தப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்று நல்ல வசூல் குவித்தது. இவரது படங்களின் வசூலைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்தே பயப்பட்டார் என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ராமராஜன் பத்து வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் ரீ- என்ட்ரி கொடுக்கும் திரைப்படம் ‘சாமானியன்’. ராகேஷ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசும்போது, “ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார்.

நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ’ஸ்டார்ட் கட் ஆக்சன்’ சொன்னது ராமராஜனுக்கு தான்" என்றார்.

பட விழாவில்
பட விழாவில்

மேலும், “1981-ம் ஆண்டிலிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம். இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் 'சக்திவேல்' என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான 'புருஷ லட்சணம்' படத்தில் இருந்து 'கோலவிழியம்மா' என்ற சாமி பாடலை பாடிக் காட்டினேன்.

அதன் பிறகு வெளியே வந்ததும் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார். அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார்.

உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது. உடனே 'மாங்குயிலே பூங்குயிலே' போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட்டாகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in