சென்னை உயர்நீதிமன்றம்  
க்ரைம்

சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டிடங்கள்... எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி!

காமதேனு

அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் 10 மாடியில் கட்டப்பட்டுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமானப் பணியில் ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என சி.எம்.டி.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்ட அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை முதல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கப்பட்டது? என சிஎம்டிஏ-வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கட்டுமானப் பணிகள்

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிக்க வேண்டியது மாநகராட்சியின் பொறுப்புதான் என தெரிவித்தார்.

இதையடுத்து தாமாக முன்வந்து சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கட்டிட அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர். மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது, ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டாத தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நடைமுறைகள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அத்துடன்  வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

SCROLL FOR NEXT