கொல்லப்பட்ட கண்ணன் 
க்ரைம்

பிரியாணி கடை உரிமையாளர் தலை துண்டித்து படுகொலை... நெய்வேலியில் பயங்கரம்!

காமதேனு

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வட்டம் 20ஐ சேர்ந்தவர் கண்ணன்(56). இவரது மனைவி கமலா(50). இவர்களுக்கு ரம்யா(33) என்ற மகளும், தர்மராஜ், முத்துராஜ் என்ற இரு மகன்களும் உள்ளனர். கண்ணன் அதேபகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான பிரியாணி கடை நடத்தி வந்தார்.

நெய்வேலி நகரம் மட்டும் அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர் பிரியாணி கடையின் கிளைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் கடையின் வியாபாரத்தை முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு, நெய்வேலி நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலை வழியாக கண்ணன் சென்றார். அப்போது அங்கு இருட்டு பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கண்ணனை கல்லால் அடித்து வண்டியை கீழே விழ வைத்தனர்.

இதன் பின்பு கத்தியால் அவரது தலையை வெட்டிச் சிதைத்தனர். இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.

எழில்நிலவன், சல்மான்கான்

இந்த சம்பவத்தின் போது, கண்ணனின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் எழில்நிலவன் என்பவர் கண்ணனின் பிரியாணி கடைக்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது, பிரியாணிக்கு பணம் தராமல் அடாவடி செய்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கண்ணன் தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த எழில்நிலவன் கண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்கில் எழில்நிலவன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த எழில்நிலவன், பிரபல ரவுடி பாம் ரவி என்பவருடன் இணைந்து கண்ணனை கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த எழில்நிலவன் மற்றும் அவரது கூட்டாளி சல்மான்கான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT