சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கும் வனத்துறை 
க்ரைம்

குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம்... வனத்துறையினர் எச்சரிக்கை!

காமதேனு

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் உறங்கவும், கால்நடைகளை வெளியில் கட்டி வைக்கவும் வேண்டாம் என பாலக்கோடு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மலை அடிவார கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஹள்ளி கிராமத்தில், மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் வசித்து, விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடித்து சென்றுள்ளதாக புகார்கள் எழ துவங்கின.

திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனையடுத்து அதனை உற்று பாரத்த போது அது சிறுத்தை என்பது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மலை உச்சியில் தெரிந்த சிறுத்தை நடமாட்டம்

இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது குறித்து, செல்போனில் பதிவான காட்சிகளை கொண்டு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஹள்ளி பகுதியை சுற்றி, இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் சிறுத்தை இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் இருக்கும் குடியிருப்புக்களை நோக்கி வந்து செல்வதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

வனத்துறையினர் தீவிர ரோந்து பணி

இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு வேளை சிறுத்தையால், கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் விலங்குகளை அச்சுறுத்துவதாக நினைத்து மின்சாரம் வைப்பது, நாட்டு வெடி குண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டால், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கால்நடைகளை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தல்
SCROLL FOR NEXT