மீண்டும் ஊட்டி ஆப்பிள்... மகிழ்ச்சியில் நீலகிரி விவசாயிகள்!

உதகையில் விளைந்துள்ள ஆப்பிள்கள்
உதகையில் விளைந்துள்ள ஆப்பிள்கள்

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட முயற்சிக்கு பிறகு ஆப்பிள் விளைவிக்கப்பட்டு வருவது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு பரிச்சயமானதும், மிகவும் விரும்பும் பழங்களில் ஒன்றாகவும் ஆப்பிள் இருந்து வருகிறது. பனிமலைகள் சூழ்ந்த பகுதியில் மிக அதிக உயரத்தில் ஆப்பிள் மரங்கள் வளர்கின்றன. அதிக குளிரும் மிதமான வெயிலும் இருந்தால் மட்டுமே இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதால் இந்தியாவில் இமயமலை அடிவாரங்களில் விளைவிக்கப்படும் காஷ்மீர், இமாச்சல் ஆப்பிள்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது.

விவசாய நிறுவனத்தின் இரண்டரை வருட முயற்சிக்கு பலன்
விவசாய நிறுவனத்தின் இரண்டரை வருட முயற்சிக்கு பலன்

இந்தியாவில் தற்போது காஷ்மீர் ஆப்பிள்களும், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்தும் வரும் ஆப்பிள்களும் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆப்பிள்களை பல்வேறு சமதளப் பகுதிகளில் விளைவிக்க மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளை பயிரிட விவசாயிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் இலை நோய் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு மரங்கள் முற்றிலும் மாயமானது. ஆப்பிள் மரங்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரியில் இருந்து மறைந்துவிட்டன. தோட்டக்கலைத்துறை சார்பில், கல்லாறு, காட்டேரி உள்ளிட்ட பழத்தோட்டங்களில் ஆய்வுக்காக மட்டும் ஒரு சில மரங்கள் உள்ளன.

ஊடுபயிராக பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பிக்கை
ஊடுபயிராக பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பிக்கை

இந்நிலையில், ஆப்பிள், ஆரஞ்சு, பியர், உள்ளிட்ட மலைப்பிரேதச பழங்களை நீலகிரியில் மீண்டும் விளைவிக்க கூக்கல்தொறை பகுதியைச் சேர்ந்த ‘டெய்ஸி பெப்பர் ஃபார்ம்’ என்ற நிறுவனம் முயற்சி எடுத்திருக்கிறது. இந்த மரங்களை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் பயிரிட்டு வளர்த்துள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடர் பராமரிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக இயற்கையாக விளைந்த ஆப்பிள்கள் தற்போது மரங்களில் காய்த்துள்ளன. விரைவில் இந்த மரங்களில் இருந்து வணிக ரீதியாக ஆப்பிள்களை பறித்து விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் ஆப்பிள், ஆரஞ்சு மரங்களை பயிரிட முயற்சி
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் ஆப்பிள், ஆரஞ்சு மரங்களை பயிரிட முயற்சி

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பிரதான விவசாயமாக தேயிலை இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள், ஆங்கில காய்கறிகள், சைனீஸ் காய்கறிகள் ஆகியவை பயிரிடப்படுகிறது. ஊடு பயிர்களாக காபி, மிளகு உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

தற்போது ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட மரங்களும் வெற்றிகரமாக வளர்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் இதனை அதிக அளவில் வளர்க்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலமாக தரமான ஆப்பிள் நாற்றுகளை விற்பனை செய்து இவற்றை வளர்க்க தங்களை ஊக்குவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து பல மாதங்கள் பயணித்து இந்தியா வரும் ஆப்பிள்களை பாதுகாக்க நிறமிகள் மற்றும் செயற்கை ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், உள்ளூரிலேயே விளையும் ஆப்பிள்கள் சத்தான உணவாக இருப்பதோடு, உள்ளூர் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தையும் ஈட்டித்தரும் என நம்பிக்கை உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in