கீழடியில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகளின் அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.
கீழடியில் அதன் பின்னர் 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன் பின்னர் நீதிபதிகள் மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!