தேசத்தின் முதல் தேர்தல் விநோதம்... வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 28 லட்சம் பெண்கள்

கடந்த தேர்தலில் வாக்களிக்க காத்திருந்த பெண்கள்
கடந்த தேர்தலில் வாக்களிக்க காத்திருந்த பெண்கள்

தேசத்தின் முதல் மக்களவைத் தேர்தலில் சொந்தப் பெயரை சொல்ல மறுத்ததால், வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெண்கள் நீக்கப்பட்ட விநோதம் அரங்கேறி இருக்கிறது.

தேர்தல் என்பது மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வது மட்டுமல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசம் தன்னையே பரிசீலித்துக் கொள்வதும் அடங்கும். தேசத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றோடு, பாலின சமத்துவத்திலும் தேர்தல்கள் உரைகல்லாகி வருகின்றன. அவற்றின் விளைவாக தேர்தல் தோறும் பெண்களின் முன்னேற்றமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால், 1950-51-ல் நடைபெற்ற நாட்டின் முதல் தேர்தலின்போது பெண் வாக்காளர்கள் நிலைமை பரிதாபகரமாக இருந்தது.

1950-ம் ஆண்டு இந்தியா குடியரசாக மாறுவதற்கு ஒரு நாள் முன்பு உருவான இந்திய தேர்தல் ஆணையம், இதுவரை 17 பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஆனால் முதல் பொதுத் தேர்தலை நடத்துவதில், நாட்டின் புவியியல் மற்றும் மக்கள்தொகை தொடர்பான பல சவால்களை அது கடக்க வேண்டியிருந்தது, அப்போது பெரும்பான்மையான வாக்காளர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்ததும் கூடுதல் சவாலாக சேர்ந்தது.

இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல்
இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல்

குறிப்பாக பொதுவெளியிலும், குடும்பங்களிலும் பெண்கள் புறக்கணிப்பட்டவர்களாகவே நீடித்தனர். கிட்டத்தட்ட அடையாளமற்றவர்களாக அவர் புழங்கினர். முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் இறங்கியபோது, இந்த வகையிலான விநோதங்களை அதிகாரிகள் வீடு தோறும் எதிர்கொண்டனர். ஏராளமான பெண்கள் தங்களுடைய பெயருக்கு பதிலாக குடும்பத்து ஆண்களின் பெயரால், தங்களை வாக்காளர் பட்டியலில் ஏற்றியிருந்தனர். அதாவது இன்னாரின் மனைவி, இன்னாரின் மகள் அல்லது சகோதரி என்பதாகவே பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

பெண்கள் தங்கள் பெயரை மூன்றாம் நபர்களிடம் தெரிவிக்கத் தயங்கியதோடு, தனிப்பட்ட அடையாளங்கள் இன்றி குடும்பத்து ஆண்களின் முகமூடிகளில் வளையவந்த காலம் அது. ஆணாதிக்கத்தின் உச்சம் என்றும் சொல்லலாம். இதனால் வாக்காளர் பட்டியலில் ஆண்களின் பெயர்கள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றிருக்க, பெண்களின் பெயர்கள் மட்டும் குடும்பத்து ஆண்களின் பெயர்களில் ஒளிந்துகொண்டிருந்தது. இவற்றைக் கண்டு துணுக்குற்ற தேர்தல் ஆணையம் கனத்த இதயத்தோடு ஒரு முடிவை எடுக்கத் துணிந்தது.

சொந்தப் பெயரை குறிப்பிடாது, ஆண்கள் பெயரில் ஒளிந்திருந்த பெண் வாக்காளர்கள் அனைவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்தது. மிகவும் கடினமான முடிவு அது. ஆனால் அப்படியே விட்டிருந்தால், அரசின் பிற துறைகளும் வாக்காளர் பட்டியலை பின்பற்றியே பெண்களை அவர்களது குடும்பத்து ஆண்களின் அடையாளத்தில் பதிவு செய்திருக்கக்கூடும். இந்தியப் பெண்கள் தங்கள் சுயத்தை கண்டடைய மேலும் சில தசாப்தங்கள் தாமதமாகி இருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக பெண்கள் தங்கள் அடையாளத்தை இழந்திருப்பார்கள்.

குடும்பத்து ஆண் பெயர்களில் ஒளிந்திருக்கும் பெண்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்த தேர்தல் ஆணையம், அதனை உடனடியாக அமல்படுத்தாது சில மாதங்கள் அவகாசம் தந்தது. அதற்கு ஒருவகையில் பலனும் கிடைத்தது. வட இந்தியாவில் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பாரத் மற்றும் விந்தியப் பிரதேசம்(கடைசி இரண்டும் தற்போதைய மத்திய பிரதேசம்) ஆகிய மாநிலங்களில், ராஜஸ்தான் தவிர்த்து கணிசமான மாற்றம் தென்பட்டது. அதிகாரிகள் விளக்கத்துக்கு குடும்பங்கள் இணங்கியதில், பெண்களின் உண்மையான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ஏறியது. அந்த தேர்தலில், பெண்கள் தலைநிமிர்ந்து வாக்களிக்க அது உதவியது.

முதல் தேர்தலில் வாக்களிக்கும் பெண்கள்
முதல் தேர்தலில் வாக்களிக்கும் பெண்கள்

ஆனபோதும் தேசத்தின் 8 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்களில், கிட்டத்தட்ட 28 லட்சம் பெண்கள் கடைசி வரை தங்களது பெயர்களை பதிவிடத் தவறினார்கள். எனவே இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை கனத்த இதயத்தோடு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. 1951-52 பொதுத் தேர்தல் அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் (ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து) மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடிக்கும் சற்று அதிகமாக இருந்தது. இவர்களில் தோராயமாக 45 சதவீதம் பேர் பெண் வாக்காளர்கள்.

இதுவே கடந்த 2019 மக்களவை தேர்தலில், நாடு 67.4 சதவீத வாக்காளர்களை பதிவு செய்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத வகையில் 67.18 சதவீத பெண்கள் வாக்களித்துள்ளனர். இது வாக்களித்த ஆண்களின் 67.01 சதவீதத்தைவிட சற்றே அதிகம். இந்த புள்ளிவிவரங்கள் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியை மட்டும் கூறவில்லை. ஆண்களின் நிழலில் இருந்து வெளிவந்து, பல வழிகளில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்ற நாட்டின் பெண் வாக்காளர்களின் விடுதலையையும் சுட்டிக்காடுகின்றன.

தற்போது நாட்டில் மொத்தம் 47.1 கோடி பெண்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கு, 12 மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இது தேர்தல் செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பதற்கான ஆரோக்கியமான அறிகுறியும் கூட!

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in